திருப்பத்தூர்

கழக பிரமுகர் குடும்பத்தினருடன் தற்கொலை முயற்சி – திருப்பத்தூர் நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கண்டனம்

திருப்பத்தூர்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திருப்பத்தூரில் தி.மு.க.வினரின் தூண்டுதலால் நகராட்சி அதிகாரிகள் கழக பிரமுகரின் வீட்டை ஜேசிபி மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பம் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி 17-வது வார்டில் வசித்து வருபவர் பல்லவன். கழக பிரமுகரான
இவர் நகர எம்ஜிஆர் மன்றம் செயலாளராக உள்ளார். இவர் குடும்பத்துடன் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள புறம்போக்கு இடத்தில் கடந்த 60 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகிறார். இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் நகராட்சிக்கு சொந்தமான இடம் எனக்கூறி கடந்த 24-ம்தேதி இடத்தை 3 நாட்களில் காலி செய்ய நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

ஆனால் கால அவகாசம் இருக்கும் நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க.வினரின் தூண்டுதலின் பேரில் நகராட்சி அதிகாரிகள் பல்லவன் குடும்பத்தினர் வீட்டில் யாரும் இல்லாத போது நகராட்சி ஊழியர்களை கொண்டு ஜேசிபி மூலம் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10 லட்சம் ரூபாய் காணவில்லை என கூறப்படுகிறது.

தங்களுக்கு நியாயம் வேண்டியும், நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வீட்டின் முன்பு பல்லவன் குடும்பத்தினர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டனர். அப்போது திருப்பத்தூர் டிஎஸ்பி சாந்தலிங்கம் அவர்களை தடுத்து நிறுத்தினார்.

60 ஆண்டு காலமாக குடியிருக்கும் வீட்டை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீட்டை இடித்து தரைமட்டம் செய்ததால்,
கழக பிரமுகர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.வினரின் கைப்பாவையாக செயல்படும் நகராட்சி அதிகாரிகளின் அராஜக செயலுக்கு திருப்பத்தூர் நகர மக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.