தற்போதைய செய்திகள்

போளூர் பகுதியில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

சென்னை
போளூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்திலே மிகவும் பின்தங்கிய மாவட்டம். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்ற போளூர் சட்டமன்ற தொகுதியிலே படித்தவர்கள், ஏழைகள், எளியவர்கள் அதிகமாக நிறைந்திருக்கின்ற

காரணத்தினால், அந்த தொகுதி மக்களின் நன்மைக்காக, முன்னேற்றத்திற்காக, அந்த பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற படித்த ஏழை, எளியோர்களின் நன்மைக்காக, அரசின் சார்பிலே ஒரு சிப்காட் தொழிற்சாலை அமைக்க அரசு முன் வருமா என்று துணை கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் பதில் அளிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் பின்தங்கிய மாவட்டம். கல்வியிலே, வேலை வாய்ப்பிலே பின்தங்கிய மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்பூங்கா அமைப்பதற்கான நில எடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

போளூர் போன்ற பகுதிகளும் தொழில் வளர்ச்சிக்கு உகந்த இடமாக உள்ளது. நிச்சயமாக வரும் காலங்களில் ஆய்வு செய்து தொழிற்பேட்டை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை அரசு ஆராயும் என்று தெரிவித்தார்.