கன்னியாகுமரி

கொரோனா தடுப்புப்பணிகளுக்கு, கூடுதலாக ஒதுக்கப்பட்ட 2 ஆம்புலன்ஸ்கள் – என்.தளவாய் சுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கன்னியாகுமரி

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்பேரில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு, கூடுதலாக 2 ஆம்புலன்ஸ்கள் (108) ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் தெரிவித்ததாவது:- 

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, தற்போதைய கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கி வருவதோடு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தேவையான உணவு மற்றும் தரமான சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ வசதிகளை சிறப்புடன் வழங்கி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 2008-ஆம் ஆண்டுமுதல் இதுவரை 11 ஆம்புலன்ஸ்கள்(108); பயன்பாட்டில் இருந்து வருகிறது. இவ்வாகனங்களின் வாயிலாக, ஏப்ரல் 2020 முதல் ஜூலை 2020 வரை மொத்தம் 4,630 கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பொதுமக்களை, அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்பட்டும், குணமடைந்தவர்களை அவர்களது வீடுகளுக்கு திரும்ப அழைத்து செல்லும் பணியினையும் மிகச் சிறப்பாக செய்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நோயாளிகளின் நலனுக்காக, கூடுதலாக ஆம்புலன்ஸ்கள் ஒதுக்க வேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், கோரிக்கை வைத்தேன்.

இக்கோரிக்கையினை ஏற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வசதிக்காக, கூடுதலாக 3 ஆம்புலன்ஸ்களை (108) உடனடியாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 2 ஆம்புலன்ஸ்கள்(108) வழங்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், 2 ஆம்புலன்ஸ்கள் கூடுதலாக நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விரைவில் வரவுள்ளது. இதன்வாயிலாக, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் சிறப்பான சேவை செய்ய இயலும். மேலும், கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் மருத்துவமனைக்கு, தாமதமின்றி அழைத்து சென்று விரைவாக சிகிச்சைகள் அளிக்க முடியும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.