மூதாதையர்கள் காலத்திலிருந்து வசித்து வருபவர்களுக்கு வாரிசு அடிப்படையில் புதிய பட்டா -பேரவையில் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வலியுறுத்தல்

சென்னை,
மூதாதையர்கள் காலத்திலிருந்து வசித்து வருபவர்களுக்கு வாரிசு அடிப்படையில் புதிய பட்டா வழங்க வேண்டும் என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வலியுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பொள்ளாச்சி வட்டம், போடிபாளையம் ஊராட்சி, புது காலனியில் பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு நில அளவை செய்து தர வேண்டும் என்று முன்னாள் சட்டப்பேரவை துணைத்தலைவரும், பொள்ளாச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் பதில் அளிக்கையில், பொள்ளாச்சி வட்டம், போடிபாளையம் ஊராட்சி புது காலனியில் 28 நபர்களுக்கு பட்டா அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டா வழங்கப்பட்ட இடங்களில் நில அளவீடு செய்ய முற்படும் போது ஏற்கனவே வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்கள் வெளியூர் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் நில அளவை பணி மேற்கொள்ள இயலவில்லை என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார் என்று பதில் அளித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவுக்கு எந்தவிதமான எதிர்ப்பும் அந்த பகுதியில் இல்லை. வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டு கால தாமதம் இல்லாமல் அந்த பயன்பாடு இல்லாத வண்டி பாதையாக இருந்தது.
பட்டா அளிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, அருந்ததியர் மக்களுக்கு உடனடியாக நில அளவை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாக்கள் அனைத்தும் உள்ளூர் தாழ்த்தப்பட்ட, அருந்ததியர் மக்களுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவ்வாறு இருந்தால் அதற்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன்.
எனவே உடனடியாக நில அளவை மேற்கொள்ள வேண்டும். அதுபோல பொள்ளாச்சி, கிணத்துகடவு ஆகிய இரண்டு வருவாய் வட்டங்கள் எங்கள் சட்டமன்ற தொகுதியில் இருக்கிறது. இந்த இரண்டு இடங்களிலும் பட்டா வழங்கப்பட்டு அளவு செய்யப்படாமல் இருக்கின்ற நிலங்களை உடனடியாக அளந்து அந்தந்த பகுதியிலே இருக்கின்ற மக்கள் குடியிருப்பதற்காக ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
மூதாதையர்கள் காலத்திலிருந்து வசித்து வருகிற மக்களுக்கு இப்போது குடியிருப்பவர்களுக்கு நேரடியாக வாரிசு அடிப்படையிலே அவர்களுக்கும் புதிய வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேசினார்.