தி.மு.க. அரசுக்கு நாட்டு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் – பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்

சென்னை
சொத்து வரி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்கள் தி.மு.க. அரசுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.
சட்டசபையில் நேற்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையின் மீதான
விவாதத்தில் முன்னாள் அமைச்சர், எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
தி.மு.க தேர்தல் அறிக்கையில், 505 வாக்குறுதிகளை, படிப்படியாக நிறைவேற்றுவதாக கூறி வருகிறீர்கள். இருந்தாலும்கூட, தேர்தல் காலத்தில், ஆட்சிக்கு வந்தவுடன், உடனடியாக நீட்தேர்வை ரத்து செய்வோம், அதற்கான சூட்சுமம், எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என தேர்தலுக்கு முன்பு, ஊர் ஊராக வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் ஆட்சி அமைத்து 10 மாதங்கள் ஆகியும் நீட்தேர்வு ரத்து என்பது கானல் நீராகவே உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியாரின், ஆட்சிகாலத்தில் நீட்தேர்வு ரத்து செய்வது தொடர்பாக, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசு மற்றும் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே, எவ்வித முன்னேற்றமும் இல்லாமல், ஆளுனரிடம் உள்ளது. இதுதான் உங்கள் சூட்சுமமா ?
மேலும், முதல்வரின் முகவரி, எனும் திட்டத்தை, உங்கள் தொகுதியில் முதல்வர், மற்றும் சி.எம். செல் என்ற இரண்டையும் இணைத்து “முதல்வரின் முகவரி திட்டம்” தொடங்கப்பட்டு 10 லட்சத்து 1 ஆயிரத்து 883 மனுக்கள், தீர்வு காணப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில்
தெரிவித்துள்ளீர்கள்.
ஆனால், 1 கோடிக்கும் மேற்ப்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில் சுமார், 10 சதவீதம் அளவிலான மனுக்களுக்கு
மட்டுமே தீர்வு கண்டுள்ளீர்கள். பிற மனுக்களின் நிலை என்ன? 2022- – 2023 நிதி நிலை அறிக்கையானது ஏழை,
எளிய நடுத்தர மக்களின், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல், குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு, ஏமாற்றம் அளிக்கும், காகிதப்பூ அறிக்கையாக உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில்,
உள்ளாட்சித்துறைக்கு, அதிகமான நிதி ஒதுக்கவில்லை. கொள்கை விளக்க குறிப்பு புத்தங்கங்கள் 2022-2023ல் புதியதிட்டங்கள் ஏதுமில்லை.
அம்மா அவர்களின், நல்லரசு செயல்படுத்திய, மக்கள் நலத்திட்டங்களான, ஏழை பெண்களின் திருமணத்திற்கு, தாலிக்கு 8 கிராம் தங்கம், உதவிதொகை 50,000 வரை திட்டம் ரத்து, அரசியல் காழ்புணர்ச்சியால், குறுகிய மனபான்மையோடு, அனைத்து விவசாயிகள்,
பயிர்க்கடன் தள்ளுபடி, பயனாளிகள் கண்டறிவதில், குளறுபடி மற்றும் நிபந்தனைகள். 5 பவுன் வரை, அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி, அம்மா மினி கிளினிக் திட்டம் முடக்கம், அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவை, வளர்க்கும் வகையில், அறிவித்து வழங்கப்பட்ட, மடிகணினி வழங்கும் திட்டம் ரத்து,
குடிமராமத்து திட்டம் மூலம், வண்டல் மண், விலையில்லாமல், விவசாய பெருங்குடிகள்,
பயன்படுத்திக் கொள்வது. இதுபோன்ற, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா மற்றும் எடப்பாடியார் ஆகியோர் செயல்படுத்திய நலத்திட்டங்களை, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், அவைக்கு உதவாத, காரணங்களை தெரிவித்து, இந்த அரசு ரத்து செய்துள்ளது. பொது மக்களின் பயன் கருதி ரத்து செய்யப்பட்ட முந்தைய அரசின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திட இவ்அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
அரசு முடிவு செய்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தியும், பெருநகர சென்னை மாநகராட்சி, பிரதான நகர பகுதியில் மட்டும், குறைந்த பட்சம் 50 சதவீதத்திலிருந்து, அதிகபட்சம் 150 சதவீதம் வரை, சொத்துவரி உயர்த்தியும், பிற மாநகராட்சிகளிலும்,
சென்னையோடு,
இணைக்கப்பட்ட பகுதிகளிலும், 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை, சொத்து வரி உயர்த்தியும், கடந்த 30-ந்தேதி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, கொரோனா பாதிப்பினால் பொதுமக்கள் அடிப்படை வாழ்வாதாரங்களை இழந்தும், தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்தும், மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்தும், கடுமையான நிதி நெருக்கடியில்,
அனைத்து தரப்பு மக்களும், பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின், விலை உயர்வினாலும் அனைத்து அத்தியாவசிய மளிகை பொருட்களும், தொழிற்சாலைக்கு தேவையான, மூலப்பொருட்களின் விலை உயர்வும், மற்றும் கட்டுமான தொழிலுக்கு தேவையான,
சிமெண்ட், கம்பி உள்ளிட்ட, மூலப் பொருட்களின் விலை உயர்வு, மொத்தத்தில் அனைத்து தரப்பினரும், பொருளாதார ரீதியாக, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, இந்த இக்கட்டான சூழ்நிலையில், 150 சதவீதம் வரை சொத்துவரி உயர்வை,
அரசு கைவிட வேண்டும். நாட்டு மக்கள், அமைதியாக நடைபெறும் நிகழ்வுகளை,
பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உரிய நேரத்தில் தகுந்த பதிலடியை தருவார்கள் என்பது நிச்சயம்.
இவ்வாறு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசினார்.