வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தி.மு.க.வினர் முட்டுக்கட்டை

மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நல்லுர் ஒன்றியக்குழு தலைவர் புகார்
கடலூர்,
வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தி.மு.க.வினர் முட்டுக்கட்டை போடுவதாக கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் செல்வி ஆடியபாதம் தலைமையில் துணைத்தலைவர் ஜான்சிமேரி தங்கராசு, கவுன்சிலர்கள், மாவட்ட ஆவின் தலைவர் டி.எம்.பச்சமுத்து, நல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பொன்னேரி தி.முத்து, ராஜா, செல்வகுமார், பத்மாவதி, ராஜலட்சுமி ஆகியோர் கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நல்லூர் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் தடுக்கும் தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.
இதன்பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நல்லூர் ஒன்றியத்தில் கடந்த 2 வருடத்திற்கு மேலாக மக்களுக்கான வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளது.
இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முழுமையாக நடைபெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இதுமட்டுமின்றி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகள் துரிதமாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். இங்கு வளர்ச்சி பணிகளை நடைபெற விடாமல் தடுப்பவர் தி.மு.க ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி.
தி.மு.க. கவுன்சிலர் முத்துக்கண்ணு என்பவரை தலைவராக்க வேண்டும் என்பதற்காக நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அதன் மீது வாக்கெடுப்பு நடந்தது.
அதில் தோல்வி அடைந்துள்ளது. வாக்கெடுப்பு நடக்கும் நேரத்தில் 8 ஒன்றியக்குழு உறுப்பினர்களான நாங்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உள்ளோம். எனவே ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களை செயல்பட விட வேண்டும். அதற்கு தடையாக உள்ள தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.