தமிழகம்

மூத்த வழக்கறிஞர்களை வைத்து தமிழக அரசு வாதிடாதது ஏன்?பேரவையில் எதிர்கட்சி தலைவர் கேள்வி

சென்னை

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிடாதது ஏன்? என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை கூட்டம் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. பின்னர் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக
பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினர்.

இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

புரட்சித்லைவி அம்மா அரசு பல காலமாக போராடிய வன்னிய பெருமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அடிப்படையில் தான் 10.5 சதவீதஇட ஒதுக்கீட்டை சட்டமாக கொண்டு வந்து நிறைவேற்றியது.

ஆனால் அதற்கு முன்பே ஜாதி வாரியாக கணக்கெடுக்க நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் தமிழ்நாடு முழுவதும் ஜாதி வாரியாக கணக்கெடுத்து அரசுக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் வன்னியர்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்ததால் உடனே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், 10.5 சதவீத இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று நாங்கள் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினோம். அதைத்தொடர்ந்து சிலர் நீதிமன்றம் சென்றனர்.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடி இருக்க வேண்டும். மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிடாதது ஏன்? அப்படி செய்திருந்தால் தீர்ப்பு நமக்கு சாதகமாக
கிடைத்திருக்கும்.

அம்பா சங்கர் ஆணைய தரவுகள் அளிக்கப்பட்டிருந்தால் நியாயம் கிடைத்திருக்கும். ஆனால் ஆவணங்களை கோர்ட்டில் முழுமையாக சமர்ப்பிக்கவில்லை. ஆவணங்களை சமர்பித்து இருந்தால் நியாயமான தீர்ப்பு கிடைத்து இருக்கும்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.