தற்போதைய செய்திகள்

2412 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடு- பசு- நாட்டுக்கோழிகள் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்

திருப்பூர்

உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 2412 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள், கறவை பசுக்கள், நாட்டுக்கோழிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அணிக்கடவு ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 347 பயனாளிகளுக்கு ரூ.44,36,395 மதிப்பீட்டில் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் 167 பயனாளிகளுக்கு தலா 25 எண்ணிக்கையிலான ரூ.328,155 மதிப்பீட்டிலான விலையில்லா நாட்டுக்கோழிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தினையும் துவக்கி வைத்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. தெற்கு ஆசியா கண்டத்தில் இல்லாத வகையில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் சேலம் மாவட்டம் தலைவாசலில் விவசாயப் பெருங்குடி மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் சர்வதேச தரத்திலான ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பண்ணைக்கிணறு கிராமத்தில் ரூ.82.13 கோடி மதிப்பீட்டில் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டங்கள் தமிழக மக்களுக்காக முதலமைச்சரால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்டங்களையும் பொதுமக்கள் நல்ல முறையில் பெற்று வளம்பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

இதனைத் தொடர்ந்து புதுப்பாளையம் ஊராட்சியில் 468 பயனாளிகளுக்கு ரூ.59,83 லட்சம் மதிப்பிலான விலையில்லா வெள்ளாடுகள், வாகத்தொழுவு ஊராட்சியில் 319 பயனாளிகளுக்கு ரூ.40,78,415 மதிப்பீட்டிலான விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் 117 பயனாளிகளுக்கு தலா 25 எண்ணிக்கையிலான ரூ.2,29,905 மதிப்பீட்டிலான விலையில்லா நாட்டுக்கோழிகள்,

பூளவாடி ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கு ரூ.19,45,000 மதிப்பிலான விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் 174 பயனாளிகளுக்கு தலா 25 எண்ணிக்கையிலான ரூ.3,41,910 மதிப்பீட்டிலான விலையில்லா நாட்டுக்கோழிகள், வடுகபாளையம் ஊராட்சியில் 418 பயனாளிகளுக்கு ரூ.53,44,130 மதிப்பீட்டிலான விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் 85 பயனாளிகளுக்கு தலா 25 எண்ணிக்கையிலான ரூ.1,67,025 மதிப்பீட்டிலான விலையில்லா நாட்டுக்கோழிகள் மற்றும் குறிஞ்சேரி ஊராட்சியில் 150 பயனாளிகளுக்கு ரூ.19,17,750 மதிப்பீட்டிலான விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் 117 பயனாளிகளுக்கு தலா 25 எண்ணிக்கையிலான ரூ.2,29,905 மதிப்பீட்டிலான விலையில்லா நாட்டுக்கோழிகள் என உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 2412 பயனாளிகளுக்கு ரூ.2,50,01,970 மதிப்பீட்டிலான விலையில்லா வெள்ளாடுகள், கறவை பசுக்கள் மற்றும் அசில் இன நாட்டுக்கோழிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

முன்னதாக கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் புதுப்பாளையம் ஊராட்சியில் ரூ.5,33,480 மதிப்பீட்டில் கால்நடை கிளை நிலையம், தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் மற்றும் மூங்கில் தொழுவு ஊராட்சியில் ரூ.5,33,480 மதிப்பீட்டில் கால்நடை கிளை நிலையம், தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் மற்றும் குறிஞ்சேரி ஊராட்சியில் கால்நடை கிளை நிலையம் ஆகியவற்றையும் அமைச்சர் திறந்து வைத்தார்.