சிறப்பு செய்திகள்

விடியா தி.மு.க. ஆட்சி சர்வாதிகார அரசு -எடப்பாடியார் குற்றச்சாட்டு

சேலம்,

அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும், இந்த விடியா தி.மு.க. அரசு சர்வாதிகார அரசாக செயல்படுகிறது என்றும் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: ஜாக்டோ ஜியோ மாநாட்டில் எந்த விதமான அறிவிப்பும் வரவில்லை என்று அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளார்களே.

பதில் : இது தெரிந்த விஷயம் தானே. அவர்கள் ஏமாந்து விட்டார்கள். இப்போது இருக்கின்ற முதலமைச்சர் அவர்களை ஏமாற்றி விட்டார். இதுதான் நடந்த உண்மை. நாங்கள் ஏற்கனவே சொன்னோம். கழக ஆட்சியில் அம்மா இருக்கும் போதும் சரி, நான் இருக்கும் போதும் சரி அவர்களுக்கு எந்த தடையும் இல்லாமல், எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் அரசு ஊழியர்கள் தங்களுடைய பணியை சிறப்பாக செய்தார்கள். இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

பல இடத்திலிருந்து, பொது மக்களிடமிருந்து வரும் செய்தி எப்போது உங்கள் ஆட்சி வரும் என்பது தான். அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இப்படிப்பட்ட பேச்சு சமீப காலமாக வந்து கொண்டிருக்கிறது. இந்த அரசு சர்வாதிகார அரசு போல நடைபெற்றுக்கொண்டுள்ளது.

கேள்வி : அண்மையில் தமிழக முதல்வர் ஒவ்வொரு தொகுதியிலும் தீர்க்க முடியாத 10 பிரச்சினைகள் குறித்து குறிப்பிடுங்கள் என்று கடிதம் எழுதியிருந்தார். அது குறித்து உங்கள் கருத்து

பதில் : அவர் சொல்வது சிறப்பாகத்தான் இருக்கிறது. கேட்பதற்கு மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. செயல்பட்டால் தானே. ஏற்கனவே நான் கொண்டு வந்த திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளார்களே. 100 ஏரி திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளார்களே. 100 ஏரி திட்டம் வரலாற்று சிறப்பு மிக்க திட்டம்.

பல ஆண்டு காலமாக விவசாயிகளும், பொதுமக்களும் இந்த 100 வறண்ட ஏரிகளுக்கு மேட்டூரிலிருந்து வெளியேறுகிற உபரிநீரை நீரேற்றி மூலமாகக் கொண்டுவந்து நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

அந்த கோரிக்கையின் அடிப்படையில் அந்த திட்டத்தை கொண்டு வந்தோம். அதனை கிடப்பில் போட்டு விட்டார்கள். அவர் குறிப்பிடும் எல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள். வெறும் விளம்பரம் தான். நாங்களும் அவர் குறிப்பிட்டப்படி அளித்துள்ளோம்.

பார்க்கலாம். எடப்பாடி தொகுதி சார்பாக நானும் அளித்துள்ளேன். எப்படி செய்யப்போகிறார் என்று பார்க்கலாம். தொகுதி மேம்பாட்டு நிதியை இன்னும் சரியாக அளிக்க மாட்டேன் என்கிறார்கள்.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.