தற்போதைய செய்திகள்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மாணவர்களுக்கு அரசு மருத்துவகல்லூரிகளுக்கு இணையான கல்வி கட்டணம் – அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

சென்னை

கடலூர் சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கல்விக் கட்டணம் நிர்ணயக்கப்படுகிறது என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனவாகும். இதனை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். இதன் ஓர் அங்கமாக 2020-2021-ம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்த மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று அதனை கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தற்போது இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி, இராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளை உள்ளடக்கிய அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவக் கல்வி நிறுவனங்களை 27.01.2021 நாளிட்ட உயர்கல்வி (எச்1) துறை அரசாணை (நிலை) எண் 16-ன் வாயிலாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி, இராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரிகளில் உள்ளதைப் போன்று கல்விக் கட்டணம் செலுத்த நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டுள்ளது.

அதாவது எம்.பி.பி.எஸ் பாடப் பிரிவிற்கு ரூ.13,610-ம், பி.டி.எஸ் பாடப் பிரிவிற்கு ரூ.11,610-ம், பட்ட மேற்படிப்புகள் பாடப் பிரிவிற்கு ரூ.30,000-ம், பட்ட மேற்படிப்பு பட்டய பாடப் பிரிவிற்கு ரூ.20,000-ம், பி.எஸ்.சி. (செவிலியர்), இயன் முறை மருத்துவம் மற்றும் செயல்முறை மருத்துவம் ஆகிய பாடப் பிரிவிற்கு ரூ.5,000-ம் கல்வி கட்டணமாக நிர்ணயித்து முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இக்கட்டணமானது தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கும் இனி வருங்காலங்களில் இக்கல்லூரியில் பயில உள்ள மாணவர்களுக்கும் பொருந்தும்.

இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி, இராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவ கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவியர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கல்வி கட்டணம் நிர்ணயித்து ஆணை வெளியிட்டதன் மூலம், அக்கல்லூரி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே, மேற்காணும் கல்லூரி மாணவர்கள் உடனடியாக தங்களது போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்கு திரும்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.