சிறப்பு செய்திகள்

விருதுகள் பெறும் மாநிலமாக தமிழகம் தொடர்ந்து சாதனை

முதலமைச்சர் பெருமிதம்

சென்னை,

விருதுகள் பெறும் மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலளித்து பேசியதாவது:-

மத்திய அரசின் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், நாட்டிலேயே அதிகபட்சமாக 11 நகரங்களில் இத்திட்டத்தினை செயல்படுத்த ஒப்புதல் பெற்று, 11 ஆயிரம் கோடி ரூபாயில் 579 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 174 பணிகள் முடிவடைந்தும், 298 பணிகள் நடைபெற்றும் வருகின்றன.இந்தியாவிலேயே ஆளுமை மிக்க முதல் மாநிலமாக மத்திய அரசால் தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் ஆளுமையை பாராட்டி, “இந்தியா டுடே” தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சிறந்த மாநிலத்திற்கான விருதினை தமிழ்நாட்டிற்கு வழங்கி வருகிறது என்பதை இந்த நேரத்திலே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். தேசிய அளவில் நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலத்திற்கான விருதினை தமிழ்நாட்டிற்கு மத்திய ஜல் சக்தி துறை வழங்கியுள்ளது.

நீர்நிலைகளை புதுப்பித்தலில் வேலூர், கரூர் மாவட்டங்கள், முதல் இரு இடங்களையும் நீர்நிலைகளை பாதுகாப்பதில் பெரம்பலூர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசின் விருதை தொடர்ந்து 6 முறை பெற்றுள்ளது. டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் என்ற பிரிவில் மத்திய அரசின் “டிஜிட்டல் இந்தியா-2020 தங்க விருதை” இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.

‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தில், தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசின் விருதை பெற்றது. அதேபோன்று, மூத்த குடிமக்களுக்கு சிறப்பாக சேவையளிக்கும் முதல் மாநிலத்திற்கான மத்திய அரசின் விருதையும் தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. பெங்களூரில் உள்ள பொது விவகார மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு இரண்டாவது சிறந்த மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய தர உறுதித் திட்டத்தின் கீழ், சிறந்த செயல்பாடுகளுக்காக தமிழ்நாட்டில் உள்ள 26 அரசு மருத்துவமனைகளுக்கும் மற்றும் 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் மத்திய அரசால் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு விருதுகள், பொது விநியோக திட்டத்தை கணினி மயமாக்கியதில் விருது, புதுப்பிக்கப்பட்ட எரிசக்தித் துறைக்கு விருது, தரமான மருத்துவ சேவைக்கான விருதுகள், போக்குவரத்து கழகங்களுக்கும், நகராட்சிகளுக்கும் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக விருதுகள், ஊரக வளர்ச்சித் துறைக்கு அதிக அளவில் விருதுகள் என பல்வேறு விருதுகளை அம்மாவின் அரசு பெற்று தமிழ்நாடு ஒரு சிறந்த மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற விருதுகளை தமிழ்நாட்டின் ஒவ்வொரு துறையும், மத்திய அரசிடமிருந்தும், பல்வேறு பொது நிறுவனங்களிடமிருந்தும் பெற்று, விருதுகள் பெறும் மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ேபசினார்.