ராமநாதபுரம்

பள்ளி குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரிகளுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை – என்.சதன் பிரபாகர் எம்.எல்.ஏ அறிவிப்பு

ராமநாதபுரம்

பள்ளி குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரிகளுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்குவதாக பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அவர்களின் கல்வி நிலைக்கேற்றாற்போல் வகுப்புகளை ஆன்லைனில் நடத்தி வருகின்றனர்.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் மாணவர்களின் கல்வி நிலையை மேலும் உயர்த்தும் வகையில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன் பிரபாகர் கிராமங்களில் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் படித்த பெண்கள் மற்றும் படித்த பட்டதாரி இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க டியூசன் நடத்த கோரியும் அவ்வாறு இந்த புனித சேவையில் ஈடுபடும் பட்டதாரிகளுக்கு மாதம் 5000 ரூபாயை அவரது சொந்த நிதியிலிருந்து வழங்குவதாகவும் தெரிவித்தார். இதனால் பாம்பு விழுந்தான் கிராம மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வை பாராட்டினர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பாம்பு விழுந்தான் கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அண்ணா தொழிற்சங்க நிர்வாகி திருமுருகன் ஏற்பாட்டில், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன்பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ சதன்பிரபாகர் கலந்துகொண்டு பெண்களுக்கு சேலைகளும், குழந்தைகளுக்கு பள்ளி உபகரண பொருட்களையும் வழங்கினார்.

பின்னர் சதன் பிரபாகர் எம்.எல்.ஏ பேசியதாவது:-

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பரமக்குடி தொகுதி மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தந்தமைக்கு மிக்க நன்றி, அரசு கூறும்வரை அனைவரும் இந்த கொரோனா ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள படித்து முடித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் மாணவர்களுக்கு பாடங்களை நடத்துங்கள் அவர்களுக்கு எனது சொந்த நிதியிலிருந்து ரூ.5000 வழங்குகின்றேன்.

இதேபோல் பரமக்குடி தொகுதிக்குட்பட்ட குக்கிராமங்களிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி பயிற்சி கற்று கொடுப்பவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கின்றேன். கழக அரசு மக்களையும், மாணவச்செல்வங்களையும் இரண்டு கண்களை போல் பாதுகாத்து வருகிறது. நாம் அனைவரும் வீட்டில் இருப்போம், விழிப்போடு இருப்போம்.

இவ்வாறு சதன் பிரபாகர் எம்.எல்.ஏ பேசினார். உடன் கழக நிர்வாகிகள் அன்பரசு, சத்தியேந்திரன், பேரையூர் முனியசாமி,துரை வினோத், பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.