தற்போதைய செய்திகள்

பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சரி செய்ய சிறப்பு நிதி ஒதுக்கீடு

பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

சென்னை

பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சரி செய்ய சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்தார்.

சட்டசபையில் நேற்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 2021- –2022-ம் ஆண்டில் 2,30,788 புதிய வீடுகளுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டு
உள்ளதாகவும், இத்திட்டத்திற்காக 4,848 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நடப்பாண்டு நிதி நிலை அறிக்கையில்,
பக்கம் 44-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், இதுவரை ஒப்புதல் பெறப்பட்ட 8,17,439 வீடுகளில், (2016-17 முதல் 2018-19 வரை 3,27,552 வீடுகள்) மற்றும் (2019-20 முதல் 2021-22 வரை 4,89,887 வீடுகள்) 3,34,699 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ள பல்வேறு நிலைகளில் பணிகள் நடைபெறும், 4,82,740 மார்ச் 2023-ல் முடிக்கப்படும் என கொள்கை விளக்க குறிப்பில் பக்கம் 124-ல் தெரிவித்துள்ளீர்கள்.

2022-–23 நிதியாண்டில், எவ்வளவு வீடுகள் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கவில்லை? கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டதா? குறித்த விவரங்கள் எதுவும் குறிப்பிடபடவில்லை.

பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 2016 முதல் 2020 வரை ஒப்பளிக்கப்பட்ட, 1 லட்சத்து 77 ஆயிரத்து 922 வீடுகளின், கட்டுமான பணிகளை விரைவுபடுத்திட, மேற்கூரை அமைப்பதற்காக அனைத்து வீடுகளுக்கும் கூடுதலாக ரூபாய் 70,000, நிதி ஒதுக்கீடு செய்து தந்தவர், அன்றைய முதல்வர், எடப்பாடியார்.

தற்போது, கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் ஏற்கனவே ஒதுக்கீடு செய்துள்ள, தொகையை காட்டிலும், வீடொன்றிற்கு, ரூ.1 லட்சம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சரிசெய்ய சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

தமிழகத்தின் ஊரக பகுதிகளில் 1 லட்சத்து 2 ஆயிரம் சாலைகள் இருந்தன. அம்மா அவர்களின் நல்லரசில், சாலை வசதி இல்லாத, குக்கிராமங்களுக்கு, இணைப்பு சாலைகளை, ஏற்படுத்தி தரும் வகையில், கூடுதலாக 50 ஆயிரம் சாலைகள், புதியதாக அமைத்து, கிராமப்புற பகுதிகள், மேம்பாடு அடைய வழிவகை செய்யப்பட்டது.

பிரதமரின் கிராம சாலை திட்டம்-III-ன் கீழ் 1,280 கி.மீ. நீளமுள்ள 280 சாலைகளை 791 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 54 பாலங்களை, 221 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அமைப்பதற்கான பணிகள் வரும் ஆண்டில் மேற்கொள்ளப்படும் என நிதி நிலை அறிக்கை பக்கம் எண் 45-ல் தெரிவித்துள்ளீர்கள்.

குக்கிராமங்களை இணைக்கும், பிரதான சாலைகள், முக்கிய ஊரக இணைப்பு சாலைகளை, மேம்படுத்த, பிரதமரின் கிராம சாலை திட்டம்-IIIல், மேற்கொள்ளப்பட உள்ள பணிகளுக்கு அம்மா அவர்களின் ஆட்சியில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதை விரைந்து செயல்படுத்த
வேண்டும்.

இவ்வாறு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசினார்.