தற்போதைய செய்திகள்

தரிசுநில மேம்பாட்டு பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் ஆசூர் கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக்கும் திட்டத்தின் கீழ் தரிசுநில மேம்பாட்டு பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, தரிசுநில மேம்பாட்டு பணிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் அரசு தமிழகத்தில் வேளாண்மை துறையில் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளால் கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவிலேயே முதல் இடம் பெற்று மத்திய அரசின் கிரிஷி கர்மான் விருதினை பெற்று வருகிறது. தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்ந்து வருகிறது. புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படும் முதலமைச்சர் வேளாண்துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழகத்திற்கு தேவையான நெல் உற்பத்திக்கு வழிவகை செய்துள்ளார்கள். எவ்வாறு புரட்சித்தலைவி அம்மா மத்திய அரசு காவிரி ஆணையம் அமைத்து அரசிதழில் வெளியிட செய்தபோது விவசாயிகள் அம்மா அவர்களுக்கு விழா எடுத்து பாராட்டினார்களோ அதைப்போல முதலமைச்சருக்கு விழா எடுத்து கவுரவித்தனர். அந்த வகையில் வேளாண்மை துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திட தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தினை தொடங்கி தரிசு நிலங்களை விளைநிலங்களாக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் 550 ஹெக்டேர் தரிசு நிலம் தலா ரூ.10,000 மானியத்தில் விளைநிலங்களாக மேம்படுத்தப்பட உள்ளது. கயத்தாறு ஒன்றியத்தில் 80 ஹெக்டேர் தரிசு நிலங்கள் இத்திட்டத்தில் பயன்பெறும். ஆசூர் பகுதியில் 10 ஹெக்டேர் விளைநிலங்களாக மாற்றப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் அதிக விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதிகமான ஒதுக்கீடு பெற முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தரிசு நிலங்களை விளைநிலங்களாக்கும் திட்டத்தினை முழுமையாக பயன்படுத்தி நமது பகுதியில் தரிசு நிலங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர் வீரிய ரக உளுந்து விதைகள் மற்றும் மக்காச்சோள விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன், வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், வேளாண்மை துணை இயக்குநர்கள் தமிழ்மலர், ஜெயசெல்வின் இன்பராஜ், உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சசிகுமார், முக்கிய பிரமுகர்கள் வினோபாஜி, குருராஜ், ஆசூர் ஊராட்சி தலைவர் சண்முகம் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.