தற்போதைய செய்திகள் மற்றவை

தாழக்குடி- சந்தைவிளை இணைப்பு பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

நெடுஞ்சாலைத்துறைக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்

கன்னியாகுமரி

தாழக்குடி- சந்தைவிளை இணைப்பு பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தாழக்குடியிலிருந்து சந்தை விளை செல்வதற்கு பயன்பட்டு வந்த புத்தனார் கால்வாயின் குறுக்கே அமைந்த உடைந்து போன இணைப்பு பாலத்தால் தாழக்குடியில் உள்ள மக்கள் சந்தைவிளை செல்வதற்கும், சந்தைவிளையில் உள்ள மக்கள் தாழக்குடி செல்வதற்கும் மிகவும் சிரமமப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சுடுகாடு அமைந்துள்ளதால் சடலங்களை கொண்டு வருவதிலும் மிகவும் சிரமமப்பட்டனர்.

இதனடிப்படையில் தாழக்குடி- சந்தைவிளையில் (புத்தனார் கால்வாயின் குறுக்கே) புதிய இணைப்பு பாலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது தற்காலிகமாக பைப்புகள் மூலம் சிறுபாலம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பொதுமக்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நிரந்தர பாலம் கட்டும் பணிகள் தற்போது நடைபெறாமல் உள்ளது. பாலம் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பணிகள் நிறைவு பெறாமல் மக்கள் அல்லல்பட்டு வருகிறார்கள். மேலும் பணிகளும் தற்போது நடைபெறவில்லை.

தற்போது கோடை காலமாக இருப்பதால் புத்தனார் கால்வாயில் தண்ணீர் இல்லாமல் உள்ளது. இதனை பயன்படுத்தி பணிகளை உடனடியாக தொடங்கி இரண்டு மாத காலத்திற்குள் புதிய இணைப்பு பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நெடுஞ்சாலைத்துறை போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.