தற்போதைய செய்திகள்

சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் குளத்திற்கு ரூ.2.10 கோடியில் மதில்சுவர் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 4.2.2021 அன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில், 1 கோடியே 12 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டம், நாராயணப்பெருமாள் திருக்கோயிலுக்கான சேவார்த்திகள் தங்கும் விடுதி,

சென்னை-சக்தி விநாயகர் திருக்கோயிலுக்கான புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்து, சிதம்பரம் – இளமையாக்கினார் திருக்கோயிலின் திருக்குளத்திற்கு 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மதிற்சுவருக்கு அடிக்கல் நாட்டினார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ் பண்பாட்டின் பெட்டகமாகவும், ஆன்மீகத்தின் இருப்பிடமாகவும், கலைத்திறனின் நிலைக்களமாகவும் விளங்குகின்ற திருக்கோயில்களின் சொத்துக்களை பாதுகாத்து பராமரிப்பது, அன்றாடப் பூஜைகள் தங்குதடையின்றி நடப்பதை உறுதி செய்வது, பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பது போன்ற பணிகளை, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறை மூலமாக செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், நாங்கூர், நாராயணப்பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 3,565 சதுர அடி பரப்பளவில், 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேவார்த்திகள் தங்கும் விடுதி,

சென்னை மாவட்டம், கே.கே.நகர், சக்தி விநாயகர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 6,800 சதுர அடி பரப்பளவில் 52 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபம் என மொத்தம் 1 கோடியே 12 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத் துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும், கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகர், இளமையாக்கினார் திருக்கோயிலின் திருக்குளத்திற்கு 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மதிற்சுவருக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்து சமய அறநிலையத் துறையில் தட்டச்சர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 31 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் 4 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சு.பிரபாகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.