போளூர் எடப்பிறை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை
போளூர் எடப்பிறை கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தை முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எடப்பிறை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அனுமதி பெற்று இப்பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் நிரந்தரமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க புதிய கட்டிடம் வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து இடம் தேர்வு செய்ததும் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டி தரப்படும்.
அதேபோல் வீரலூர் சாலையில் இருந்து எடப்பிறை கிராமத்திற்கு வரும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இந்த சாலை தார் சாலையாக விரைவில் அமைத்து தரப்படும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பேசினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் போளூர் ஒன்றியக்குழு தலைவர்கள் செல்வன், ராஜன், போளூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் பாண்டுரங்கன், ஊராட்சி தலைவர் ஜீவா மூர்த்தி, கிளை கழக செயலாளர்கள் சேகர், சக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.