தற்போதைய செய்திகள்

புதுச்சேரி முதலமைச்சரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதா?

நாராயணசாமிக்கு கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் கடும் கண்டனம்

புதுச்சேரி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை தரம் தாழ்ந்து விமர்சித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் குறித்து அரசியல் ரீதியான விமர்சனங்கள் செய்யும் போது தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யக்கூடாது. விமர்சனங்கள் என்பது நாகரிகத்தோடு இருக்க வேண்டும். நாகரிகமற்ற முறையில் முதலமைச்சர் ரங்கசாமி முதுகெலும்பு இல்லாதவர் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.

இதுபோல் விமர்சனம் செய்வதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். கூட்டணி ஆட்சிக்கு தலைமை தாங்கி நடத்தி கொண்டிருக்கும் முதலமைச்சரின் ஆட்சி நீடிக்காது. அவரது நாட்கள் எண்ணப்படுகின்றன என்று கூறும் உரிமை நாராயணசாமிக்கு கிடையாது.

பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான க்யூட் தேர்வு இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராக தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால் அந்த தேர்வு நிறுத்தப்பட்டு விட்டதா.

அப்படி இருக்கிறது. புதுச்சேரி முதலமைச்சர் எழுதவில்லை என்பதற்காக அவரை முதுகெலும்பு இல்லாதவர் என கூறுவது கண்டிக்கத்தக்கது.

புதுச்சேரியில் திறந்தவெளி விளம்பரங்கள் தடை செய்யப்பட்டது. அந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டியது உள்துறை மற்றும் நகராட்சியின் கடமை. விளம்பரங்கள் வைக்கும் போதே அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.