சிறப்பு செய்திகள்

தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்களுக்கு பணிநியமன ஆணை – துணை முதலமைச்சர் வழங்கினார்

சென்னை

பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நேரில் வழங்கினார்.

கருவூலம் மற்றும் கணக்குத்துறை 01.04.1962-ல் தோற்றுவிக்கப்பட்டு நிதித்துறையின் கட்டுப்பாட்டில் சிறப்பாக இயங்கி வருகின்றது. இத்துறையில் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள மொத்தம் 5078 பணியிடங்களில் தற்போது 3422 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவற்றில் கணக்கர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்துத் தட்டச்சர் ஆகிய பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நிரப்பப்பட்டு வருகின்றன.

கருவூலம் மற்றும் கணக்குத்துறையில் 2018-2019 மற்றும் 2019-2020-ம் ஆண்டுகளுக்கென 114 இளநிலை உதவியாளர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக அவர்களில் 12 நபர்களுக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பணிநியமன ஆணைகளை நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், கருவூலக் கணக்குத்துறை ஆணையர் சி.சமயமூர்த்தி, கூடுதல் இயக்குநர், சித்ரா ஜான் பெர்னாண்டோ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.