தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
சென்னை
இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த 23.03.2022 அன்று வாழ்வாதாரத்தை தேடி கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழகத்தை சேர்ந்த அப்பாவி மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கைது செய்த மற்றொரு கொடூரமான சம்பவத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
அந்த ஏழை மீனவர்களை விடுவிக்க ஜாமீன் தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை நீதிமன்றத்தின் இந்த செயல் தமிழக மீனவர்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதனால் இலங்கை கடற்படையினரால் எப்போது தாக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். எனவே இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க தலா ஒரு கோடி ரூபாய் பிணை தொகையாக நிர்ணயித்திருப்பது நெருப்பில் எரியூட்டுவதாக இருக்கிறது. எனவே, தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.