சிறப்பு செய்திகள்

மழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவகாயிகளுக்கு உடனடி நிவாரணம்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை

மழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் பேசியதாவது:-

இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை செய்திருந்தும், நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை கால கனமழையின் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகியுள்ளன.

இன்றைய (நேற்று) நாளிதழில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, பூம்புகார், கொள்ளிடம், தரங்கம்பாடி, குத்தாலம், செம்பனார்கோயில் பகுதிகளில் உள்ள 170 அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில், சுமார் 70 ஆயிரம் டன் நெல் மூட்டை சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து செல்லப்படாமல், திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகள் தார்பாய் போட்டு மூடாமல் மழையில் நனைந்து சேதமாகியுள்ளன என்று செய்திகள் வந்துள்ளன.

மேலும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, செல்லம்பட்டி, சோழவந்தான், திருமங்கலம் பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும் சேதமடைந்துள்ளன. நெல் மூட்டைகளை மூடி வைக்க போதுமான தார்பாய்கள் இல்லாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், நெல் மூட்டைகளுக்கு மேலும் சேதம் ஏற்படும் நிலை உள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

மேலும் விவசாயிகளிடம் இருந்து குறித்த காலத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகளுக்கும் பெரும் நஷ்டத்திற்குள் உள்ளாகியுள்ளார்கள். அரசும் கொள்முதல் செய்த நெல் மணிகளை பாதுகாப்பாக வைக்காததால் மழையால் தொடர்ந்து இதுபோல் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. பயிர் சேதத்தை கணக்கெடுக்க வேண்டும்.

மேலும் கோடை மழையினால் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியத்தில் நெற்பயிர்கள் சேதடைந்துள்ளன. பெரிய குளத்தில் 50 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வெற்றிலை கொடிக்கால்களும் இந்த மழையால் சேதமடைந்துள்ளன.

இதுபோல் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக சேதமடைந்துள்ள பயிர்களை உடனடியாக வேளாண் அதிகாரிகளையும், வருவாய்த்துறை அதிகாரிகளையும் வைத்து கணக்கெடுத்து பாதிப்படைந்த விவசாய பெருமக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

ஆகவே இது தொடர்கதையாக இருந்து கொண்டுள்ளது, எதிர்காலத்தில் அரசு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை முறையாக பாதுகாக்க வேண்டும் என்று அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.