தற்போதைய செய்திகள்

கொடிய நோய் கொரோனாவையும் கட்டுப்படுத்திய அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பேச்சு

சென்னை, பிப். 8-

கொடிய நோய் கொரோனாவையும் கட்டுப்படுத்திய அரசு அம்மா அரசு தான் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது அம்பத்தூரில் நடைபெற்ற மகளிர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதாவது.

உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிற நோய் கொரோனா வைரஸ் தொற்று நோய், இந்த நோய் யாரிடம் உள்ளது என்று கண்டுபிடிக்க முடியாத ஒரு விசித்திர நோய். எல்லோருடைய முகமும் தெரியாத அளவிற்கு முகக்கவசம் அணிய வைத்தது இந்த நோய். அப்படிப்பட்ட கொடிய நோயையும் கட்டுப்படுத்திய அரசு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் அரசு.

நகரத்திலிருந்து கிராமம் வரை, கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, நான் அனைத்து மாவட்ட தலைநகருக்கும் நேரில் சென்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினேன். அதன் மூலம் எடுத்துச் சொன்ன செய்தியை, சரியான முறையில் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் பின்பற்றிய காரணத்தால், கொரோனா வைரஸ் பரவல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

நம்முடைய மருத்துவ நிபுணர் குழுவிடமிருந்து ஒவ்வொரு மாதமும் தகுந்த ஆலோசனையை அரசுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஆலோசனையை நாங்கள் பெற்று, ஒவ்வொரு பகுதியிலும் காய்ச்சல் முகாம் நடத்தினோம். சுரியான ரிசல்ட் கிடைக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நாம் மேற்கொண்டோம். 254 பரிசோதனை நிலையத்தை நாம் ஏற்படுத்தி, இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனை நிலையத்தை உருவாக்கிய அரசு, அதிகமான அளவில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையைச் செய்ததும் நாம்தான்.

அதனால்தான், கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் இந்தியாவிலுள்ள அனைத்து முதலமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இன்றைக்கு தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது, அதற்குக் காரணம் தமிழ்நாடு எடுத்த நடவடிக்கை. இன்றைக்கு அவர்கள் முறையாக ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டு, அதிகமாக காய்ச்சல் முகாம் நடத்தினோம்.

தொற்று இருக்கின்ற இடங்களில் உடனடியாக நடமாடும் மருத்துவக் குழு மூலமாகச் சென்று பரிசோதனை செய்து, அதில் ஏதாவது கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டால், அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தார்கள், வீடுவீடாக நம்முடைய அலுவலர்கள் அங்கிருப்பவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல் போன்ற கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கின்றதா என்று கேட்டறிந்து, அப்படி அறிகுறி ஏதாவது இருப்பின் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்து குணமடையச் செய்கின்றோம்.

இதுபோன்ற தொடர்நடவடிக்கைகளின் காரணமாக, தமிழகத்தில் கொரோன வைரஸ் பரவல் இன்றைக்கு 500-க்கும் கீழே குறைந்திருக்கின்றது. இன்னும் கொஞ்சம் நாளில் படிப்படியாக குறைத்து விடுவோம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.