சிறப்பு செய்திகள்

திமுகவிற்கு குடும்பம் தான் முக்கியம் கழகத்திற்கு மக்கள் தான் முக்கியம் – முதலமைச்சர் பேச்சு

சென்னை

திமுகவிற்கு குடும்பதான் முக்கியம்,கழகத்திற்கு மக்கள்தான் முக்கியம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திருவள்ளூர் மாவட்டம், போரூர் சந்திப்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியதாது:-

கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை, தனது மகன் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தினார். தற்போது ஸ்டாலின் தனது மகன் உதயாநிதியை முன்னிலைப்படுத்தி வருகிறார். ஆக தி.மு.கவில் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. திமுக கட்சி இல்லை, அது ஒரு கார்பரேட் கம்பெனி.

ஸ்டாலின் சேர்மன், உதயநிதி போர்டு ஆப் டைரக்டர், கனிமொழி, தயாநிதி மாறன் அனைவரும் போர்டு மெம்பர்கள். வருகின்ற தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக இருக்க வேண்டும். கழகத்தில் ஒரு சாதாரண தொண்டன் கூட எம்.எல்.ஏ ஆகலாம், எம்.பி. ஆகலாம், மந்திரி ஆகலாம், ஏன் முதலமைச்சர் கூட ஆகலாம். யார் மக்களுக்கு சேவை செய்கிறார்களோ, தலைமைக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்கள் வீட்டின் கதவைத்தட்டி பதவி வழங்குகின்ற இயக்கம் கழகம்.

மக்களுக்கு உழைக்கின்ற இயக்கம் கழக இயக்கம். ஸ்டாலின் மட்டும் அல்ல, அவரைப்போல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் கழக தொண்டனைக்கூட தொட்டுப்பார்க்க முடியாது. ஸ்டாலின் கழகத்திற்கு இன்னும் 3 மாதம் தான் இருக்கின்றது என கூறி வருகின்றார். கடந்த 4 வருடங்களாக இப்படித்தான் பேசி வருகின்றார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் எனக்குப் பின்னாலும் கழகம் 100 வருடத்திற்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் என்று சொன்னார். அதை மக்கள் துணையுடனும், தொண்டர்களின் துணையுடனும் நிச்சயமாக நிறைவேற்றி காட்டுவோம். கிராமம் முதல் நகரங்கள் வரை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம்.

கிராமத்தில் இருப்பவர்களுக்கு கான்கிரீட் வீடுகள், நகரத்தில் இருப்பவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தருகிறோம். கிராமத்தில் உள்ளவர்களுக்கு 4 லட்சம் பசுமை வீடுகளும், நகரத்தில் உள்ளவர்களுக்கு 3.5 லட்சம் பசுமை வீடுகளும் கட்டிக் கொடுத்திருக்கின்றோம். தி.மு.கவிற்கு குடும்பம் தான் முக்கியம். அ.தி.மு.கவிற்கு மக்கள் தான் முக்கியம்.

சென்னை மாநகரத்தினை சுற்றியிருக்கும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு ஓராண்டுக்கு தேவையான குடிநீரை பாதுகாப்பாக தேக்கி வைத்துள்ளோம். குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு, ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகாமல் தேக்கி வைத்துள்ளோம். தடுப்பணை கட்டப்பட்டதன் மூலம் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்துள்ளது.

அம்மாவின் ஆட்சி தொடர வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு. மதுரவாயல் சுற்றுவட்டார இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தினரின் கோரிக்கையினை ஏற்று மயான பூமி அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலிலே கழக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிப் பெறச் செய்யுமாறு உங்களை எல்லாம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.