தஞ்சை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கும்பகோணம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள காய்கறி மார்க்கெட், அன்னை பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா நோய்த்தடுப்பு மையத்தின் உணவு வசதிகள், சிகிச்சை வசதிகள், மருத்துவ முறைகள் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நமது மாவட்டத்தில் 3,008 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 973 நபர்கள் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். 2006 நபர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சையில் உள்ள 973 நபர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, வல்லம் கொரோனா நோய் சிகிச்சை மையம், பட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மையம், கும்பகோணம் அன்னை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் ஆகிய பகுதிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் உள்ள அனைவருக்கும் தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அனைவரின் உடல்நிலையும் சீராக உள்ளது. அவர்களுக்கு கபசுரக் குடிநீர், ஜின்க் மாத்திரைகள் உள்ளிட்ட சத்தான உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இம்மாவட்டத்தில் 76 கட்டுப்பாட்டு பகுதிகள் தற்போது உள்ளது. இப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாத வகையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது மாவட்டத்தில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று சற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு முதலமைச்சரின் உத்தரவின்பேரில் கூடுதலாக காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நமது மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் 1,222 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. முகாம்கள் மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று உள்ள பகுதிகளில் இக்காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 71 ஆயிரத்து 304 நபர்கள் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர்.

காய்ச்சல் கண்டறியும் முகாமில் தெர்மல் ஸ்கேனர், பிராண வாய்வு கண்டறியும் கருவி உள்ளிட்டவைகளை கொண்டு மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு கபசுர குடிநீர் ஜின்க் மாத்திரைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இம்முகாமில் காய்ச்சல் அறிகுறிகள் தென்படும்பட்சத்தில் அவர்களுக்கு உடனடியாக சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 1500 நபர்களுக்கும் மேலானவர்களுக்கு சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் அருகாமையில் உள்ள கொரோனா வைரஸ் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர். பொதுமக்கள் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அதிகளவில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிகுறி தென்படுபவர்களில் தங்களது வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொள்ள விரும்புபவர்களுக்கு தனியறை, தனி கழிவறை உள்ளிட்ட போதுமான இடவசதி இருந்தால் அவர்களை அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அல்லது சுகாதார அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அனுமதி தருகிறோம். அந்த வகையில் மாவட்டத்தில் இதுவரை 23 நபர்களுக்கு அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தை பொருத்தவரை ஏழு நபர்களுக்கு அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி தந்துள்ளோம். வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை நகராட்சியை பொறுத்தவரை நகராட்சி அலுவலர்கள், சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்களும் ஊரகப் பகுதிகளை பொருத்தவரை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதா என்பதை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வீட்டை விட்டு வெளியே சென்றால் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதேபோல் சமூக இடைவெளியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்,

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ராமு, கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் விஜயன், கும்பகோணம் நகராட்சி ஆணையர் லெட்சுமி, கும்பகோணம் நகர்நல அலுவலர் பிரேமா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.