தற்போதைய செய்திகள்

புதிய வகை கொரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? பேரவையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கேள்வி

சென்னை
புதிய வகை கொரோனா எக்ஸ்.இ. பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேரவையில் கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தமிழகத்தில் புதிய வகை கொரோனா வந்துள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி குறித்து கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

கொரோனா பெருந்தொற்று காலம் முடிந்து, 3-வது அலையும் முடிந்து நல்ல சூழ்நிலையில் தற்போது நாம் பயணித்து கொண்டிருக்கிற நிலையில் இருந்து வருகிறோம். இந்த நிலையே தொடர வேண்டும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பு. ஆவல் மற்றும் எண்ணமும் அது தான்.

ஆனால், அண்மையில் வந்து கொண்டிருக்கக்கூடிய செய்திகளில் குறிப்பாக இந்தியாவில், தமிழகத்தில் வைரஸை பொறுத்தவரை ஏற்கனவே டெல்டா, பின்னர் ஒமிக்ரான் வந்தாலும் கூட, தற்போது ஒமிக்ரானில் 7 துணை திரிபுகள் வந்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அதனை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த துணை திரிபுகளில் எக்ஸ்.இ. என்பது ஒருவகை திரிபு. ஒரு 10 சதவீதம் வேகமாக பரவி வருவாதகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக குஜராத், மும்பை மாநகராட்சி மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 627 என்ற எண்ணிக்கையில் இந்த வைரஸ் பதிவாகியுள்ளது. தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் எக்ஸ்.இ. வைரஸ் பதிவாகியுள்ளது.

ஜூன் மாதத்தில் இது இந்தியாவிலும் பரவக்கூடிய வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். மத்திய அரசு சார்பில், மகராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

தமிழகத்தில் தகுதி வாய்ந்த 18 வயதுக்கு மேற்பட்டோர், 48 லட்சம் பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை. இரண்டாவது தவணை தடுப்பூசியை 1 கோடியே 37 லட்சம் பேர் எடுத்துக் கொள்ளவில்லை.

எனவே 2 கோடி பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத நிலையில், ஒருவேளை ஜூன் மாதத்தில் பரவ தொடங்கினால், அதனை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னெச்சரிக்கை பணிகள் என்ன, ஆயத்த பணிகள் என்ன, மக்களுக்கு என்ன அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி செலுத்துவதில் உள்ள தொய்வை சரி செய்து ஜூன் மாதத்துக்குள் 2 கோடி தடுப்பூசிகளை அரசு செலுத்த
வேண்டும் என்று கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ பேசினார்.