தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கழக உறுப்பினர்கள் வௌிநடப்பு – சொத்து வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி,

சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கழக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கருப்பு உடை அணிந்து பங்கேற்ற கழக மாமன்ற உறுப்பினர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் கழக மாமன்ற செயலாளர் எஸ்.பி.எஸ்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மாமன்றத்தில் எதிர்க்கட்சி உருப்பினர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கீடு செய்யாமல், ஒன்று சேர விடாமல் தடுக்கும் வகையில் கடைசியில் 2 பேருக்கும், நடுபகுதியில் ஒருவருக்கும் என இடம் ஒதுக்கியுள்ளனர்.

மக்கள் கடமையாற்ற நாங்கள் தரையில் உட்கார்ந்து கூட பணி செய்ய தயாராக இருக்கிறோம். கடந்த இரண்டு வருட காலமாக கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் நெஞ்சில் வேலை பாய்ச்சும் வகையில் தி.மு.க. அரசு சொத்து வரியை 150. சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ளது.              

தற்போது தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடந்த அவசர கூட்டத்தில் வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யும் வகையில் சொத்து வரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதனால் மாமன்ற மேயரை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கழக மாமன்ற கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, தலைவர் வழக்கறிஞர் வீரபாகு, துணைத்தலைவர் பத்மாவதி செண்பக செல்வன். துணை செயலாளர் ஜெயராணி ஜெயக்குமார், இணை செயலாளர் ஜெயலட்சுமி சுடலைமணி, பொருளாளர் வெற்றிச்செல்வன் உள்பட பலர் உடனிருந்தனர்.