தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சி அமையும் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதி

மதுரை

மக்களின் நன்மதிப்பை தி.மு.க. பெறவில்லை. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்தார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தல் திருமங்கலம் தொகுதியில் உள்ள அம்மா கோயிலில் நேற்று நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. செய்து இருந்தார்.

மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, கழக அமைப்பு செயலாளர் தாமோதரன் மற்றும் தேர்தல் ஆணையாளர்களான சூலூர் தொகுதி உறுப்பினர் வி.பி.கந்தசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் ஆகியோர் கழக நிர்வாகிகளிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

முன்னதாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

மதுரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கோட்டையாகும். கழகத்தின் சார்பில் எந்த திட்டம் என்றாலும், மாநாடு என்றாலும் முதலில் ஆரம்பிப்பது மதுரையில் தான். சென்னையில் தலைமை கழகம் உள்ளது என்றாலும் மதுரை கழகத்தின் இதயபகுதி ஆகும்.

மதுரையில் 1984-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாடு நடைபெற்றது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சிறப்பாக பேசினார். அதில் நானும் கலந்து கொண்டேன். தொடர்ந்து 2000-ம் ஆண்டில் 3 நாட்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முகாமிட்டு ஆண்டிபட்டியில் புரட்சித்தலைவர் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். மதுரைக்கு என்றே கழகத்திற்கு தனி வரலாறு உள்ளது.

மதுரை மாவட்டத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்கள்.

குறிப்பாக 50 ஆண்டுகள் குடிநீர் பிரச்சினை ஏற்படாத வண்ணம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதேபோல் புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலம் கட்டப்பட்டது. மதுரையில் 11 அம்மா உணவகங்கள், இரண்டு தடுப்பணைகள், வைகை ஆற்றின் குறுக்கே இரண்டு பாலங்கள், ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் என மதுரை மாவட்டத்திற்கு கழக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை சொல்ல ஒரு நாள் போதாது. சொல்லிக் கொண்டே போகலாம்.

தற்போது இரண்டு வடநாட்டு தொலைக்காட்சிகள் சர்வே எடுத்தது. இந்த 11 மாத தி.மு.க. ஆட்சி மிகவும் சரியாக இல்லை. எந்த திட்டமும் மக்களுக்கு கிடைக்கவில்லை. அடித்தட்டு மக்கள் முதல் தொழில் செய்யும் மக்கள் வரை யாரும் நிம்மதியாக இல்லை. ஆனால் எடப்பாடியார் தலைமையிலான அம்மா ஆட்சி சிறப்பாக இருந்தது என்று கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அதை மிரட்டி வெளியே விடாமல் தி.மு.க. கண்ட்ரோல் செய்துள்ளனர். இன்றைக்கு 80 சதவீத தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களை பாராட்டும்படி தி.மு.க. செய்து வருகிறது. விளம்பரத்தில் தான் தி.மு.க. ஆட்சி நடத்துகிறது. எந்த திட்டமும் மக்களுக்கு போய் சேரவில்லை.

கடந்த அம்மா ஆட்சிக் காலத்தில் மக்கள் நலன் கருதி வரியை உயர்த்தவில்லை. ஆனால் தற்போது தி.மு.க. அரசு சொத்து வரியை 150 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இதே போல் 1998 மற்றும் 2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வீட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது மக்களின் அத்தியாவசிய தேவையான ஆவின் பால் பொருட்கள் விலையையும் உயர்த்தியுள்ளனர்.

தமிழகத்தில் இன்றைக்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம். அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று கூறினார்கள். சொன்னதை செய்யவில்லை. மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்துவோம் என்று கூறினார்கள்.

அதுவும் செய்யவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று கூறினார்கள். பெயரளவில் மட்டும் பெட்ரோல் விலையை குறைத்துள்ளனர். ஆனால் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது, ஆனால் தமிழகத்தில் முழுமையாக குறைக்கவில்லை, இப்படி தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.

கரிகாலன் சோழன் காலத்தில் கொண்டு வரப்பட்ட குடிமராமத்து திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கொண்டு வந்தார். அந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளும் தூர் வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டது. இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது குடிமராமத்து திட்டம் இல்லை.

கடந்த அம்மா ஆட்சிக் காலத்தில் மேம்பாலங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட அனைத்தும் கொண்டு வரப்பட்டன. அதைத்தான் தி.மு.க. திறந்து வைக்கிறது. புதிதாக எந்த திட்டத்தையும் அவர்கள் கொண்டு வரவில்லை.

அம்மா ஆட்சியில் அம்மா உணவகத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மற்ற மாநிலங்களும் தமிழகத்தை பின்பற்றி இத்திட்டத்தை செயல்படுத்தினார்கள். தற்போது இந்த திட்டத்தை படிப்படியாக தி.மு.க. அரசு முடக்கி வருகிறது.

தற்போது உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. தலைமை கழகம் அறிவிக்கும் நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படவேண்டும். நம்மை பார்த்து இன்றைக்கு எதிர்க்கட்சி பயப்படுகிறது. மக்களிடம் நம் இயக்கத்தின் மீது செல்வாக்கு உயர்ந்து வருகிறது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் மிகப்பெரிய வெற்றி பெறுவோம். அதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்று மீண்டும் அம்மா ஆட்சியை அமைப்போம். ஏனென்றால் இந்த 11 மாதகால ஆட்சியில் மக்களின் நன்மதிப்பை ஒரு சதவீதம் கூட தி.மு.க. பெறவில்லை.

இவ்வாறு எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பேசினார்.