தற்போதைய செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தொற்றால் இறப்பு எதுவுமில்லை – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை கொரோனா தொற்றால் இறப்பு எதுவுமில்லை என உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் வட்டம், விளமல், ஜெ.ஜெ நகர் மற்றும் நன்னிலம் வட்டம் கூத்தனூர் கிராமத்திலுள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு பகுதிகளில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர், முககவசம், ஜிங்க் மாத்திரைகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தமிழக முதல்வரின் அறிவுரைக்கிணங்க கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வெகு சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. அதற்கு உறுதுணையாக மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் அனைவரும் இணைந்து மாவட்டத்தினுடைய கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதனை தடுக்க கூடிய அனைத்து முயற்சிகளிலும் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் வேளையில்தான் கொரோனா இல்லாத மாவட்டம் என திருவாரூர் மாவட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை, பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களால் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மாவட்டத்தினுடைய கொரோனா தொற்று எண்ணிக்கை 423 ஆக உயர்நதுள்ளது.

இருப்பினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தும் வீடுகளுக்கு திரும்புகின்றனர். தற்பொழுது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை கொரோனா தொற்றால் இறப்பு எதுவுமில்லை என்பதை இந்த நேரத்தில் மனநிறைவுடன் கூறிக்கொள்கிறேன்.

அதோடு மட்டுமில்லாமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக வீடுகள், தெருக்கள் என தனிமைப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அவர்கள் வீடுகளுக்கே சென்று அளிக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி, தனியார் மருத்துவமனைகள், இரண்டு கல்லூரிகள் ஆகிய இடங்களில் கிட்டதட்ட 1000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. எந்த சூழ்நிலையிலும், மாவட்டத்தில் ஏற்படுகின்ற கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.

நேற்றைய தினம் பிரதமர் இந்தியா முழுவதும் உள்ள 80 கோடி மக்களுக்கு 90,000 கோடி செலவில் இலவச அரிசி வழங்குவதாக அறிவித்துள்ளார். நம்மை பொறுத்தவரையில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டமானது அம்மா அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னே ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தமிழக முதல்வரால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை விஜயகுமார், உதவி இயக்குநர் சந்தானம், குடவாசல் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தென்கோவன், குடவாசல் ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.