அரியலூர்

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி 6 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும்

அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன் தகவல்

அரியலூர்

அரியலூர் மாவட்டம், புதிய அரசு மருத்துவக்கல்லூரியின் கட்டுமானப்பணிகளை அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா, தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம் முன்னிலையில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கட்டுமானப்பணிகளை உயர்ந்த தரத்துடன் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அரியலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டு, நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமான பணிகள் நடைபெற்ற வருகின்றன.

அதன்படி, 26 ஏக்கர் பரப்பளவில் ரூ.347 கோடி மதிப்பில் 150 மருத்துவ மாணவர்களுக்கான அரசு மருத்துவக்கல்லூரி 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், அலுவலகக் கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவை தரைதளத்துடன் கூடிய 6 மாடிக்கட்டிடங்கள் 9,63,192 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.

மேலும், 2021-2022-ம் ஆண்டில் 150 மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற திட்டமிட்டு, கட்டிட பணிகள் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு ஏதுவாக 6 மாத காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும். மேலும், ஒரு வருட காலத்திற்குள் அனைத்து கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் பேசினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னூலாப்தீன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், செயற்பொறியாளர் (மருத்துவப்பணி) எஸ்.மணிவண்ணன், ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்செல்வி மற்றும் பலர் உடனிருந்தனர்.