தற்போதைய செய்திகள்

இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெற முடியாது – வி.வி.ராஜன் செல்லப்பா திட்டவட்டம்

மதுரை

மக்களுக்கு வேதனை மிக்க ஆட்சியை நடத்தி கொண்டிருப்பதால் இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார்.

திருப்பரங்குன்றம் கிரிவல பாதையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி மற்றும் மேலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடைபெற்றது.

மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ முன்னிலையில் நடைபெற்ற இந்த தேர்தலில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார், கழக அமைப்பு செயலாளரும், மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் கழக நிர்வாகிகளிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஜனநாயக இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இந்த 11 மாத காலத்தில் தி.மு.க. ஆட்சி என்பது மக்களுக்கு வேதனை மிக்க ஆட்சியாக உள்ளது.

இங்குள்ள நிர்வாகிகள் தி.மு.க.வின் மக்கள் விரோத செயல்களை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். மன்னராட்சி போல இன்றைய தி.மு.க. ஆட்சி உள்ளது. இதற்கு மக்கள் முடிவு எடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட கழக நிர்வாகிகள் எஸ்.என்.ராஜேந்திரன் அம்பலம், ஓம்.கே.சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் நிலையூர் முருகன், தக்கார் பாண்டி, பொன் ராஜேந்திரன், பொன்னுச்சாமி, குலோத்துங்கன், வெற்றி செழியன், வாசு, பகுதி கழக செயலாளர்கள் வண்டியூர் செந்தில்குமார், ஜீவானந்தம், கோபி, பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.