தமிழகம்

திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார் ஸ்டாலின்-முதலமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை,

அம்மாவின் அரசு மீது ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி ேக.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது:-

தமிழகத்திலே பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி, கல்வி வசதி என அனைத்தையும் சிறப்பாகசெயல்படுத்திக் கொண்டிருக்கிற மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரினை நம் பெற்றுள்ளோம். வேண்டுமென்றே தி.மு.க தலைவர் ஸ்டாலின், கழக ஆட்சியில் ஒன்றும் நடைபெறவில்லை என்று ஒரு தவறான செய்தியை தொடர்ந்து பரப்பி வருகிறார்.

அம்மா அவர்கள் இருந்த காலத்திலேயே, இந்த பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து, இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பன நிலையான குடிநீர் கிடைக்க வழிவகை செய்தார். அதேபோல இந்தசாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து உங்களுடைய அமைச்சர் கோரிக்கை வைத்திருந்தார்.

அந்த கோரிக்கையை ஏற்று அம்மாவின் அரசு, ஊத்தங்கரையில் இருந்து திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலை, வாணியம்பாடி கூட் ரோடு வரை ரூ.216 லட்சம் மதிப்பில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டு விட்டது. பணிகள் விரைவாக குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்ற செய்தியினை இந்த நேரத்தில் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

அம்மாவின் அரசு தான் மக்களுக்காக சேவை செய்கின்ற அரசு. அம்மாவின் அரசு, குழந்தை செல்வங்கள் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகள், புத்தகங்கள், மிதிவண்டிகள் போன்றவற்றை வழங்கினார்.

விஞ்ஞான கல்வி பெறுவதற்கு விலையில்லா மடிகணினிகளை வழங்கினார். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்ற மாணவர்களோடு போட்டிபோட்டு ஜெயிக்க வேண்டும் என்பதற்காக 12,000 ரூபாய் மதிப்புள்ள மடிகணினி 52 லட்சம் மாணவர்களுக்கு அம்மாவின் அரசு வழங்கி இருக்கிறது.

கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயின்ற 6 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் பயில இடம் கிடைத்தது. அந்த நிலையை மாற்றி, அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களும் மருத்துவ படிப்பை பயில வேண்டும் என்பதற்காக அம்மாவுடைய அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது.

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை செயல்படுத்திய காரணத்தினாலே இந்த ஆண்டு 435 பேர் மருத்துவம் பயில வழிவகை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழகம் வளர அம்மாவின் அரசு தொடர்ந்து பாடுபட்டு கொண்டிருக்கிறது.

ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளிலே சிகிச்சை அளிப்பதற்காக அம்மா மினி கிளினிக் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இது வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டம். ஒரே நேரத்தில் 2000 அம்மா மினி கிளினிக் கொண்டு வந்து சாதனை படைத்த அரசு அம்மாவின் அரசு.

உங்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே, மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் அரசு அம்மாவின் அரசு.

இந்தப் பகுதி கிராமங்கள் நிறைந்த பகுதி. அதற்காக குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தினோம். ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊரணிகள் தூர் வாரப்பட்டு பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒருசொட்டு நீர் கூட வீணாகாமல் தேக்கி வைத்து கோடை காலத்திலே வேளாண் பெருமக்களுக்கு தேவையான நீரை வழங்கிக் கொண்டிருக்கிறோம். இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் நீர் நிறைந்த காட்சியை காண முடிகிறது.

புரெவி மற்றும் நிவர் புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்னல்களை துடைத்திட, 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர்கடன் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்ததும் அம்மாவின் அரசு தான்.

பண்ணைக்குட்டை அமைக்க, வேளாண் உபகரணங்கள் வாங்க என அனைத்திற்கும் மானியம் தந்து வேளாண் பெருமக்களை ஊக்குவிக்கின்ற அரசு அம்மாவின் அரசு. விவசாயிகளின் உபதொழிலான கால்நடைவளர்ப்பு சிறக்க, கால்நடைகளுக்கு அதிக மருத்துவமனைகளை திறந்த அரசு அம்மாவின் அரசு.

இப்படி, விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்திவரும் அம்மாவின் அரசு தொடர வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.