தற்போதைய செய்திகள்

தமிழகத்தின் உரிமைகளை பற்றி பேச தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

இலங்கைக்கு கச்சத்தீவை கருணாநிதி தாரை வார்த்தினால் தான் தமிழக மீனவர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறார்கள். எனவே தமிழகத்தின் உரிமைகளை பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்.

கழக அமைப்பு செயலாளரும், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாரும், முன்னாள் அமைச்சருமான டி.ெஜயக்குமார் சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய நெடுஞ்சாலைகளில் சாலைகள் போடப்பட்டு சுமார் 5 ஆண்டுகள் கழித்து தான் அதனை பராமரிக்க வேண்டும். ஆனால் கரூர் மாவட்டத்தில் கழக ஆட்சியில் போடப்பட்ட தரமான சாலைகளுக்கு சுமார் நான்கரை கோடி ரூபாய்க்கு தி.மு.க. ஆட்சியில் தற்போது பில் போட்டுள்ளது.

இது சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் அளித்ததன் பேரில் அரசு அதிகாரிகள் 9 பேர் கையும் களவுமாக மாட்டிக் கொண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக் கிறார்கள். இதன் மூலம் அவர்கள் தவறு செய்துள்ளார்கள் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

உண்மையில் இந்த தவறுக்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தான் பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும். அவரின் ஒப்புதல் இல்லாமல் இதெல்லாம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் 9 அரசு அதிகாரிகள் இப்போது பலிகடா ஆகி விட்டார்கள். இதற்கு சுதந்திரமான ஒரு விசாரணை நடத்த வேண்டும்.

காவேரி நதிநீர், கச்சத்தீவு உட்பட தமிழகத்தின் பல்வேறு உரிமைகளை தி.மு.க.வினர் தான் விட்டு கொடுத்தனர். ஹேமாவதி ஆற்றின் குறுக்கே கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தான் அணை கட்டப்பட்டது. அந்த அணை கட்டாமலிருந்திருந்தால் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீர் வந்து கொண்டே இருந்திருக்கும்.

ஆனால் இதயதெய்வம் அம்மா அவர்கள் சட்ட போராட்டம் நடத்தி அவற்றையெல்லாம் மீட்டெடுத்தார். இலங்கைக்கு கச்சத்தீவை கருணாநிதி தாரை வார்த்தினால் தான் தமிழக மீனவர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறார்கள். எனவே தமிழகத்தின் உரிமைகளை பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.