தற்போதைய செய்திகள்

உழைக்கும் தொண்டர்களை கட்சி பதவிகள் தேடி வரும்

துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் உறுதி

திருப்பூர்

உழைக்கும் தொண்டர்களை கட்சி பதவிகள் தேடி வரும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ெஜயராமன் உறுதிபட தெரிவித்தார்.

திருப்பூர் மாநகர் மாவட்டம், காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளக்கோவில் நகர கழகம் சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழுக்கள் மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர கழக செயலாளர் டீலக்ஸ் ஆர்.மணி தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதல்வரும், துணை முதல்வரும் கட்சியையும், ஆட்சியையும் கட்டிக்காத்து சிறப்பாக செயல்படுகின்றனர். நமக்குள் எந்த சங்கடங்களும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். உழைப்பவர்களுக்கு கட்டாயம் கட்சியில் பதவி கிடைக்கும். விருப்பு வெறுப்பு இன்றி அனைவரையும் நாம் அரவணைத்து செல்ல வேண்டும். ஒவ்வொரு தொண்டனும் உழைத்தால் தான் நாம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும்.

புரட்சித்தலைவி அம்மா இல்லாமல் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறோம். அனைவரும் விழிப்போடு வேலை பார்க்க வேண்டும். எல்லாருடைய உண்மையான உழைப்பு இருந்தால் தான் வெற்றி பெற முடியும். தி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தின் வெற்றிக்கு நாம் பாடுபட வேண்டும். அரசின் பல்வேறு திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறி வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கழக ஆட்சி அமைய பாடுபடுவோம்.

இவ்வாறு துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.