சட்டம்-ஒழுங்கை சீரழித்த தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
சென்னை
ஆளுநருக்கு எதிராக வன்முறையை தூண்டி விட்டு இருக்கிறார்கள் என்று கூறியுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சட்டம், ஒழுங்கை சீரழித்த தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகின்ற நிலையில், இன்று (நேற்று) காலை தமிழ்நாடு ஆளுநர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மயிலாடுதுறை தருமபுரி ஆதீன திருமடத்திற்கு செல்லும் வழியில் தி.மு.க.வின் தோழமை கட்சிகளை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடிகளை வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆளுநருக்கு எதிரான இந்த தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. இந்திய அரசமைப்பு சட்டப்படி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டுள்ள ஒரு மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது.
மேற்படி சம்பவத்தில் தி.மு.க.வின் தோழமை கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ள நிலையில், இது நிச்சயம் தி.மு.க. அரசுக்கு தெரிந்து தான் நடந்திருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் கருத்தாக இருக்கிறது.
மேற்படி வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை உடனடியாக கண்டறிந்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.