ஒருங்கிணைந்த விபத்து காப்பீட்டு திட்டத்தை அரசு தொடர வேண்டும்

பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்
சென்னை,
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன்பெறக்கூடிய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய திருப்பெயரில் இருந்த ஒருங்கிணைந்த விபத்து காப்பீட்டு திட்டம் தொடர அரசு முன்வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் வருவாய்த்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், சாமானிய மக்களுடைய நேரடி தொடர்பில் இருக்கின்றன. அதில் குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையிலே, குறிக்கோள்கள், லட்சியங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதிலே, வறுமை ஒழிப்பு என்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது. வருவாய் துறையின் 3 முக்கிய குறிக்கோள்களில், இது முதன்மையானதாக எடுக்கப்பட்டிருக்கிறது.
அதிலே, பேரிடர் மேலாண்மை என்பது பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டு, பல்வேறு முன்னேற்றங்களை கொண்டு செல்கிறது. அதிலே, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய திருப்பெயரில் ஒருங்கிணைந்த விபத்து காப்பீட்டு திட்டம் என்கிற ஒரு திட்டம், மத்திய அரசினுடைய பங்களிப்போடு, மாநில அரசின் பங்களிப்போடு, சாமானியராக வறுமை கோட்டிற்குக் கீழே இருக்கக்கூடியவர்கள்,
இயற்கை மரணமடைந்தால் 2 லட்சம் ரூபாயும், விபத்தில் மரணமடைந்தால் 4 லட்சம் ரூபாயும், விபத்தில் காயம் அடைந்தால் 2 லட்சம் ரூபாயும் என வழங்கக்கூடிய வகையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டம் பற்றி இரண்டு கொள்கை விளக்க குறிப்பு புத்தகங்களிலும் தேடித்தேடி பார்த்தேன். அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன். வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கக்கூடிய மக்கள் பயன்பெறக்கூடிய இந்த திட்டத்தை தொடர முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேசினார்.