தி.மு.க.வின் இரட்டை வேடத்திற்கு விடை இல்லை

தமிழ் ஆட்சிமொழி- பண்பாட்டுத்துறை அமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி
சென்னை
இந்தி மொழி விஷயத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடத்திற்கு விடை இல்லை என்று தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தி மொழி விஷயத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது, தன்னலம் என்றவுடன் தடம் மாறுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் என்பதை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டதற்கு தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை அமைச்சர் பதில் அளித்து இருக்கிறார். அவருடைய பதில் அறிக்கையை பார்க்கும்போது, இரட்டை வேடத்திற்கு விடை இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.
அமைச்சர் தன்னுடைய அறிக்கையில், இந்திய திருநாட்டில் உள்ள முதலமைச்சர்களில் முதன்மையானவர் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ஊடகங்களும், இந்திய அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் அரசியல் நோக்கர்களும் தமிழ்நாடு முதலமைச்சரை போற்றுவதாக தெரிவித்து இருக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான தி.மு.க. அரசு குறித்து டெல்லியில் உள்ள இரண்டு தொலைக்காட்சி சேனல்கள் கருத்து கணிப்பு நடத்தியதாகவும், அந்த கருத்து கணிப்பின் முடிவில் தி.மு.க. ஆட்சியில் ரவுடியிசம் தலை தூக்கி உள்ளதாகவும், சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்றும்,
தி.மு.க.வினர் அராஜக செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும், கோயில்களை இடிப்பதில் அதிக அக்கறை காட்டுகிறது என்றும் 2 தினங்களுக்கு முன் பத்திரிகையில் செய்தி வந்துள்ளதை அமைச்சர் பார்க்கவில்லை போலும்! இந்தி மொழி குறித்த மத்திய உள்துறை அமைச்சரின் கருத்திற்கு தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் தனது நிலைபாட்டினை உறுதிபட முதலமைச்சர் தெரிவித்து இருப்பதாக அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலைப்பாடு ஏட்டில் இருந்தால் மட்டும் போதாது, செயல்பாட்டிலும் இருக்க வேண்டும்.
இந்த தருணத்தில் ஒரு சம்பவத்தை சுட்டிக் காட்டுவது எனது கடமை. 16-09-2020 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் மூலிகைகள் சம்பந்தமான ஒரு புத்தகம் சுகாதாரத் துறையின் மூலமாக வைக்கப்பட்டபோது, அதிலே மூலிகைகளின் பெயர்கள் இந்தியில் போடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி, அது மும்மொழி கொள்கையை ஆதரிப்பது போல இருக்கிறது என்று கூறியவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்.
ஆனால், இன்று ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகளை இந்தியில் மொழி பெயர்த்து அதை தமிழ்நாடு அரசின் இணையதளத்திலேயே வெளியிடுகிறது தி.மு.க. அரசு. அன்று ஒரு நிலைப்பாடு, இன்று ஒரு நிலைப்பாடு. ஆட்சிக்கு முன் உள்ள நிலைப்பாட்டினை அமைச்சர் மறந்து விட்டார் போலும்!
அடுத்தபடியாக, இந்தி மொழி குறித்த உள்துறை அமைச்சரின் கருத்து குறித்து ‘ஒன்றுமே தெரியாது’ என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இணை ஒருங்கிணைப்பாளர் அன்புச் சகோதரர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்ததாகவும், அதனை நான் கண்டித்து இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறி இருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் இந்தி மொழி குறித்து தெரிவித்த கருத்து முதலில் அவருக்கு தெரியாததால் ‘ஒன்றுமே தெரியாது’ என்று கூறினார். பின்னர், அதற்கு மறுநாளே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் அறிக்கை வெளியிட்டு விட்டதால் அவர் ஒன்றும் சொல்லவில்லை.
காரணம், பேரறிஞர் அண்ணாவின் இருமொழி கொள்கை தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடு. தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டு விட்டது. எனவே, ஒரே நிலைப்பாடு தான்.
தமிழுக்காக தி.மு.க. அரசு செய்த சாதனைகளை அமைச்சர் பட்டியலிட்டு இருக்கிறார். இதுபோன்ற சாதனைகள் எல்லா ஆட்சிக் காலத்திலும் நடைபெறுகின்ற இயல்பான ஒன்றுதான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது 1981-ம் ஆண்டு மதுரையில் ஐந்தாவது உலக தமிழ் மாநாடும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 1995 -ம் ஆண்டு தஞ்சாவூரில் எட்டாவது உலக தமிழ் மாநாடும் நடத்தப்பட்டன.
1981-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதியன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தை துவக்கிய பெருமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தையும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரையும் சாரும். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட தமிழ்நாடு அரசின் பங்குத் தொகையாக 10 கோடி ரூபாயும்,
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட ஒரு கோடி ரூபாயும், 2019-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற நான்காவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாட்டிற்கு அரசின் நிதியுதவியாக 16.50 லட்சம் ரூபாயும், குவகாத்தி பல்கலைக்கழக தமிழ் துறையில் தமிழ் நூலகம் அமைக்கவும், கணினி வழி தமிழ்மொழி கற்க கணினிகள் வாங்கிடவும் 2.89 லட்சம் ரூபாயும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசால் வழங்கப்பட்டது.
இதுபோன்று எண்ணற்ற திட்டங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது தவிர, தனிப்பட்ட முறையில், தமிழ் வளர்ச்சிக்காக ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு நான் ஏழு லட்சம் ரூபாய் வழங்கினேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தமிழ் மீது உள்ள அக்கறை குறித்து இந்த தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ நல்கை வழங்குமாறு இந்திய மொழிகள் மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவரின் 15-03-2000 நாளிட்ட கடிதம் வாயிலாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்க பெற்றது. அப்போது தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றது.
இதுகுறித்து 2000- 2001-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் மீது தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது “ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை நிறுவப் பெறும்” என அறிவிக்கப்பட்டது. இதற்கேற்ப 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை நிறுவ 50 லட்சம் ரூபாய் ஒரே தவணையில் கொடுக்கப்பட வேண்டுமென்றும் அல்லது ஆண்டுக்கு பத்து லட்சம் ரூபாய் வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் 04-07-2000 நாளிட்ட கடிதம் வாயிலாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தெரிவித்ததோடு, தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட தொகையை திருப்பி அனுப்பிவிட்டது. அதற்கு பிறகு தி.மு.க. அரசால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதான் தமிழ் வளர்ச்சியில் தி.மு.க.விற்கு உள்ள அக்கறை.
பின்னர், 2001-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, மீண்டும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து கோரிக்கை வரப்பெற்று, அதனை அம்மா அவர்கள் நிறைவேற்றினார்.
தமிழ் வளர்ச்சித்துறை இலாக்காவை தன் வசம் வைத்துக் கொண்டு இவற்றை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பாசறையில் பாடம் பயின்ற என்னை, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்த என்னை, தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை பத்தாண்டுகள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் சமர்ப்பித்த என்னை பார்த்து முன்னதாகவே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.
எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான் நான் அறிக்கை விடுத்தேன் என்பதை அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
கடைசியாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக் காலத்தில் பதினென் கீழ் கணக்கு நூல்களில் திருக்குறள் தவிர்த்து ஏனைய நூல்கள் இந்தி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளார் அமைச்சர்.
தமிழ் இலக்கிய நூல்களை இந்தி மொழியிலோ அல்லது பிற மொழிகளிலோ மொழி பெயர்ப்பதன் மூலம் கல்தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த மொழியாம் தமிழ் மொழியை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிற மொழிகளை பேசுபவர்கள் மத்தியில் எழும். இது தமிழ் வளர்ச்சிக்கானது.
அதே சமயத்தில், முதலமைச்சரின் விதி 110-ன் கீழ் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் படிக்கப்பட்ட அறிவிப்புகளை இந்தியில் மொழி பெயர்த்து அதனை தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடுவதன் மூலம் தமிழ்மொழி கற்கும் ஆர்வம் பிற மொழிகளை பேசும் மக்களுக்கு ஏற்படாது.
இது தன்னலத்திற்கானது. எது எப்படியோ, ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற பழமொழிக்கேற்ப, இந்தி மொழி விஷயத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடத்தை மறைமுகமாக ஒத்துக் கொண்ட அமைச்சருக்கு நன்றி.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.