தற்போதைய செய்திகள்

நயினார் நாகேந்திரன் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் – அமைச்சர் உதயகுமார் பேட்டி

சென்னை

முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை எண்ணுாரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் அதிமுகவுக்கு வருவதை கட்சியில் உள்ள யாரும் மறுக்க மாட்டார்கள்.

அவரோடு சென்ற முன்னாள் எம்எல்ஏ சீனிவாசன் அதிமுகவுக்கு திரும்பி விட்டார். அவர் வந்தால் அம்மாவின் பிள்ளைகள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்.அவரை போன்று உழைப்பவர்கள்,மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம்.களப்பணியாளர்களை பொறுத்தவரை தாங்களாக முன்வந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் யார் வந்து சேவை செய்ய முன்வந்தாலும் அரசு ஏற்க தயாராக இருக்கிறது.

குப்பை வண்டியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள், அது மாற்று வாகனம் இல்லாத நிலையில் கவனக் குறைவாக நடைபெற்ற நிகழ்வு. அதுதொடர்பாக அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் தான் இருக்கிறது. கிட்டத்தட்ட 62 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 10 சதவீதம் பேருக்கு தான் கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக அறியப்பட்டுள்ளது. எனவே நோய்த்தொற்று கட்டுக்குள் இருக்கிறது. 5, 609 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டாலும் அதை விட அதிகமாக கிட்டதட்ட 5800 பேர் ஒரே நாளில் குணமடைந்திருக்கிறார்கள்.

மேலும் டெஸ்ட் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆரம்பநிலையிலேயே நோய்த்தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு குணப்படுத்தப்படுகிறது மேலும் சென்னையில் காய்ச்சல் தடுப்பு முகாம் மூலம் பரவலாக நோய்த்தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த முகாம்களை தமிழகம் முழுவதும் நடத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.