தற்போதைய செய்திகள்

கொரோனா தொற்று பாதிப்பால் 44 மருத்துவர்கள் உயிரிழந்ததாக உதயநிதி வெளியிட்ட டுவிட்டர் தகவலுக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடும் கண்டனம்

சென்னை

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக தவறான தகவலை வெளியிட்டதாக கூறி திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதிக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், இதுபோன்ற தகவல்களை வெளியிட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசின் பன்முக நடவடிக்கையால் குணமடைந்தோர் விகிதம் 77.8 சதவீதம் ஆக உள்ளது. நாட்டிலேயே அதிகமான கொரோனா பரிசோதனை நிலையங்களை கொண்டுள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளை அளிக்கும் வசதி தமிழகத்தில் உள்ளது. இதுவரை 28,92,395 நபர்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. 57 பேருக்கு வெற்றிகரமாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 1 லட்சத்து 18 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பேரிடர் காலத்தில் சமூக வலைத்தளங்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். தேவையற்ற ஆதாரங்களற்ற வதந்திகளை பரப்பக்கூடாது. திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி தமிழகத்தில் முன்களத்தில் இருந்த 43 டாக்டர்கள் உயிரிழந்ததாக ஆதாரமற்ற செய்தியை வெளியிட்டுள்ளார். இது உண்மையற்ற தவறான செய்தி.

இது மிகவும் கண்டனத்திற்குரியது.இந்திய மருத்துவர்கள் சங்கம் அப்படிப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தகவலை வெளியிடவில்லை என்று மறுத்திருக்கிறது. பேரிடர் காலத்தில் மருத்துவ கட்டமைப்புகள் அதிகமாக உள்ள தமிழகத்தில் இப்படிப்பட்ட தகவல்களை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். இது போன்ற தவறான தகவலை வெளியிட்டு மருத்துவர்களின் மன உறுதியை குலைக்க வேண்டாம். யாராக இருந்தாலும் இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிட வேண்டாம். அவ்வாறு வெளியிட்டால் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.