தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நம்பி மோசம் போய் விட்டோம்

கோட்டையில் முதலமைச்சரை சந்தித்து நியாயம் கேட்போம்-கோவில்பட்டி தொகுதி வில்லிசேரி கிராம மக்கள் கொந்தளிப்பு
தூத்துக்குடி
தி.மு.க. அளித்த வாக்குறுதியை நம்பி நகைகளை அடகு வைத்து விட்டு இப்போது கடன் தள்ளுபடி செய்யப்படாததால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட வில்லிசேரி கிராம மக்கள் மோசம் போய் விட்டோமே என்று வேதனையடைந்துள்ளனர். அபராத வட்டியை செலுத்த கூட்டுறவு வங்கி நெருக்கடி கொடுப்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து உள்ளனர்.
5 பவுன் நகையை அடமானம் வைத்திருப்பவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டமன்ற பொது தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதியை நம்பி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லிசேரி கிராம மக்கள் கூட்டுறவு வங்கியில் நகைகளை அடகு வைத்து கடன்களை பெற்று இருந்தனர்.
ஆனால் இப்போது அவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. மாறாக நகைக்கடனுக்கு அபராத வட்டியை செலுத்த வேண்டும் என்று வில்லிச்சேரி கூட்டுறவு வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து உள்ளனர். தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி நகைகளை அடகு வைத்து விட்டு இப்போது மோசம் போய் விட்டோமே என்று வில்லிசேரி கிராம மக்கள் வேதனையில் கிடந்து தவிக்கின்றனர்.
தி.மு.க. அளித்த வாக்குறுதியை நம்பி நகைகளை அடகுவைத்து விட்டு இப்போது கடன் தள்ளுபடி செய்யப்படாததால் இப்போது பாதிக்கப்பட்ட அந்த கிராம மக்கள் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தின் போது நகை கடனை தள்ளுபடி செய்யாமல் அபராத வட்டியை செலுத்துமாறு கூட்டுறவு வங்கி நெருக்கடி கொடுத்து வருகிறது. எனவே எங்களின் நகை கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து உள்ளனர்.
இதுகுறித்து வில்லிசேரி கிராம மக்கள் கூறுகையில், நீங்கள் பெற்ற தங்க நகை கடனுக்கு உடனே வட்டி செலுத்தி நகையை மீட்டு கொள்ளுங்கள்.
இல்லை என்றால் அபராத வட்டியை செலுத்துங்கள். உங்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்வதற்கான எந்த ஒரு உத்தரவும் எங்களுக்கு வரவில்லை என்று கூட்டுறவு வங்கியின் சார்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மேலும் நடவடிக்கை இல்லை என்றால் நாங்கள் கோட்டைக்கு சென்று முதலமைச்சரிடம் நியாயம் கேட்போம் என்றனர்.