கேரளாவில் கழகத்தை வலுப்படுத்துவோம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி சூளுரை

கோவை,
கேரளாவில் கழகத்தை வலுப்படுத்த எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி சூளுரைத்துள்ளார்.
கேரளாவில் நேற்று கழக அமைப்பு தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர்களான கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, கழக அமைப்பு செயலாளர் செ.தாமோதரன் எம்.எல்..ஏ மற்றும் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஏ.நாசர், கேரளா மாநில எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சுகுணாபுரம் சுகுமார் ஆகியோர் பார்வையிட்டு கழக நிர்வாகிகளிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்கிணங்க தேர்தல் பொறுப்பாளராக நான் பணியாற்றியபோது கேரளாவில் கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் கழகம் மகத்தான வெற்றி பெற்றது. இதற்காக புரட்சித்தலைவி அவர்களின் பாராட்டை நாம் பெற்றோம். கேரளாவில் பிறந்த எம்.ஜி.ஆர். தமிழகத்தில் மூன்று முறை முதல்வராக இருந்து மக்களுக்கு சேவை செய்தார்.
நான் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றிய போது இங்கு உள்ள நிர்வாகிகள் கடந்த சட்டமன்ற தேர்தலில் கழகம் கணிசமான வாக்குகளை பெற கடினமாக உழைத்தார்கள். நாங்கள் பொறுப்பாளராக இங்கு பணியாற்றுவதை விட கேரளாவிலும் சிறந்த தலைவர்களை நீங்கள் உருவாக்க வேண்டும். உங்களில் ஒருவர் தலைமைக்கு வர வேண்டும். கேரளாவில் அனைத்து இடங்களிலும் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த எடப்பாடியார் தமிழக முதல்வராக சிறப்பாக ஆட்சி நடத்தினார். நீங்களும் கேரளாவில் சிறப்பாக பணியாற்றினால் தலைமை பதவிக்கு வரமுடியும். கழகத்தின் மிகப்பெரிய சக்தியாக கேரளா மக்கள் விளங்குகிறார்கள்.
மேலும் அதிகப்படியான உறுப்பினர் சேர்க்கையில் கழக நிர்வாகிகள் ஈடுபட வேண்டும். அதற்கு அனைத்து விதத்திலும் ஓத்துழைப்பு நல்க கழகம் துணை நிற்கும்.
மேலும் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கேரளா மாநிலத்தில் அதிக இடங்களில் கழகம் போட்டியிட வேண்டும். கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கினைப்பாளர் நேரில் வந்து பிரச்சாரத்தை துவக்கி வைப்பார்கள்.
இவ்வாறு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசினார்.