நாகர்கோவில் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் தொடர்ந்து இயங்க வேண்டும்

முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்
கன்னியாகுமரி
திருநெல்வேலி சரகத்துடன் இணைக்காமல் நாகர்கோவிலிலேயே கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறத்தி உள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் கைத்தறித்துறை உதவி இயக்குநர் அலுவலகமானது திருநெல்வேலி சரகத்திலிருந்து 14.09.1987-ல் பிரிக்கப்பட்டு நாகர்கோவில் சரகமாக செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 35 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் சுமார் 5500-க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன.
4000-க்கும் மேற்பட்ட இயங்கும் தறிகளும் அதை சார்ந்த உபதொழில்கள் செய்பவர்களும் நாகர்கோவில் சரகத்தில் உள்ளனர். நாகர்கோவில் சரகத்தை திருநெல்வேலி சரகத்தோடு இணைக்கும் பொழுது நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு நேரம் மற்றும் பணம் வீணாகவும் வாய்ப்புள்ளது.
மேலும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்து நெசவாளர்களுக்கு தொழில் இழப்பும் ஏற்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் வாய்ப்பும் உள்ளது. ஏற்கனவே திருநெல்வேலி சரகமானது திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய பரப்பளவுடன் இயங்கி வருகிறது.
நாகர்கோவில் சரகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து தனி சரகமாக செயல்படுவது கன்னியாகுமரி மாவட்ட நெசவாளர்களுக்கும், கைத்தறி நெசவாளர் சங்கங்களுக்கும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாய்ப்பாக அமையும். இதனை கருத்தில் கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் சரக உதவி இயக்குநர் அலுவலகம், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தொடர்ந்து செயல்பட்டு 5500 நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.