தற்போதைய செய்திகள்

புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் தடுப்புசுவருடன் கூடிய தார்சாலை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை

கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை சிறப்புநிலை பேரூராட்சியில், ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலான புதிய பாலம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பீட்டிலான தடுப்புசுவருடன் கூடிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் `எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்ற எண்ணத்தினை செயல்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள்.

அதன்படி, கிராமப்பகுதிகளும், நகரப்பகுதிகளுக்கு இணையாக மேம்பாடு அடையவும், சாலை, சுகாதாரம், சுற்றுச்சூழல் என அனைத்து வகைகளிலும் தன்னிறைவு அடையவும் பல்வேறு முன்னோடித் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலைகள், காந்திபுரம் பகுதியில் இரண்டடுக்கு மேம்பாலம், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்துநிலையம், உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம், உப்பிலிபாளையம் முதல் சின்னயம்பாளையம் வரையிலான உயர்மட்ட மேம்பாலம், அத்திக்கடவு அவினாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி கோயம்புத்தூர் மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அதுபோலவே, நகரப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிகராக மேம்பட்ட வளர்ச்சி பணிகள் கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக தார்சாலைகள், சிறுபாலங்கள், குடிநீர் வசதி, பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், கழிப்பறைகள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள் போன்றவற்றின் தரம் உயர்த்தப்பட்டு முன்மாதிரி மாவட்டமாக கோயம்புத்தூர் திகழ்ந்து வருகின்றது.

மதுக்கரை பேரூராட்சியில், மதுக்கரை மார்க்கெட் பகுதியிலிருந்து குரும்பபாளையம் ரோடு செல்லும் பகுதியில் ஓடைபள்ளம் அமைந்துள்ளது. அப்பகுதியில் மழைக்காலங்களில் பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் நடந்து செல்லவும், போக்குவரத்து வாகனங்கள் கடக்கவும் ஏற்படும் சிரமங்களை போக்கும் வகையில், மதுக்கரை மார்க்கெட் பகுதியில் இருந்து குரும்பபாளையம் சாலையில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே, மதுக்கரை பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண்.18 மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதையில் மேம்படுத்தப்பட்ட தார்சாலை அமைக்க இப்பகுதி மக்களாலும் பல்வேறு பகுதியிலிருந்து தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களாலும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கை நிறைவேற்றும் வகையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தடுப்புச்சுவருடன் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, மதுக்கரை பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலம் மற்றும் தடுப்புச்சுவருடன் கூடிய தார்சாலை ஆகியவை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்விரு பணிகளையும் மேற்கொள்ள சிறப்பு முயற்சி மேற்கொண்டு தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்; மூலம் சிறப்பு ஒதுக்கீடு பெற்று இவ்விரு பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, தொடர்மழையால் ராஜவாய்க்கால் நீர்வழிப்பாதையில் தண்ணீர் செல்லும், வழியினை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், நொய்யல் ஆற்றில் நீர் நிரம்பி செல்லுவதையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை எ.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், மதுக்கரை பேரூராட்சி கழக செயலாளர் கே.சண்முகராஜா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.