தற்போதைய செய்திகள்

மத்திய அரசு மீது பழி போட்டு தி.மு.க. அரசு தப்பிக்க முயற்சி – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

நாமக்கல்

தமிழ்நாட்டில் ஏற்படும் தொடர் மின்வெட்டுக்கு மத்திய அரசு மீது பழிபோட்டு தி.மு.க. அரசு தப்பிக்க முயற்சி செய்கிறது என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகர கழகம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே மற்றும் கடைவீதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நகர கழக செயலாளரும், நகர கூட்டுறவு வங்கி தலைவருமான எம்.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், கு முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி எம்.எல்.ஏ., கழக மகளிர் அணி இணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மருத்துவர் வி.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் நகர கழக அவைத்தலைவர் ஆர்.கோபால், நகர கழக துணைச்செயலாளர் அ.வாசுதேவன் உட்பட ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக மின்வெட்டு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் ஆளும் தி.மு.க அரசு மத்திய அரசு தொகுப்பிலிருந்து குறைவாக நிலக்கரியை கொடுப்பதாக ஒரு தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறது.

எப்போதுமே மத்திய தொகுப்பில் இருந்து 50 ஆயிரம் முதல் 55 ஆயிரம் டன்னுக்கு மேல் நிலக்கரியை எந்த மாநிலத்திற்கும் மத்திய தொகுப்பில் இருந்து கொடுத்தது கிடையாது. அதை வைத்துத்தான் நாம் மின்வெட்டு இல்லாமல் பார்த்து கொண்டோம்.

தி.மு.க அரசு பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாகிறது, கோடை காலம் வருவது தெரிந்தும் நிலக்கரியை கையிருப்பில் வைக்காமல், அவர்களால் முடியாததை இப்போது மத்திய அரசின் மேல் பழியை போடுகிறார்கள்.

தமிழகத்தில் நிலையான மின்சாரத்தை வழங்கி மின்வெட்டே இல்லாமல் தமிழகத்தை எவ்வாறு அம்மா அவர்களும், எடப்பாடியாரும் வைத்திருந்தார்களோ அதே போல் இருக்க வேண்டும்.

சட்டசபையில் எடப்பாடியார் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதற்கு மின் துறை அமைச்சர் சரியான தீர்வு என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை. மத்திய அரசு எந்த மாநிலத்திற்கும் முழு தேவையை கொடுப்பது கிடையாது.

அப்படி இருக்கும்போது மத்திய அரசு நிலக்கரியை கொடுக்க வில்லை என்று கூறுவது எதற்கு என்றால், தி.மு.க அரசு கோடை காலம் வருகிறது என்பதை தெரிந்தும் நிலக்கரியை இருப்பு வைத்திருக்காமல் மத்திய அரசின் மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கிறார்கள்.

தி.மு.க எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் கடுமையான மின்வெட்டு வருகிறது. கழகம் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தடையில்லாமல் மின்சாரம் வருகிறது என்று இப்பொழுது மக்கள் பேசி கொள்கிறார்கள்.

கடந்த 5 ஆண்டு காலமாக நான் மின்துறை அமைச்சராக இருந்துள்ளேன். ஏதாவது தவறு நடந்திருந்தால் அவர்களது கையில் உள்ள சிபிஐ வைத்து விசாரணை நடத்தட்டும். நான் தயாராக உள்ளேன்.

இவ்வாறு நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி எம்.எல்.ஏ. கூறினார்.