தற்போதைய செய்திகள்

நாகூரில் தர்கா யாத்ரீகர்களுக்கு ரூ.1.40 கோடியில தங்கும் விடுதி

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கல்

நாகப்பட்டினம்

நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் நாகூர் தர்ஹா யாத்ரீகர்கள் தங்கும் விடுதி கட்டும் பணியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் நாகூர் தர்கா யாத்ரீகர்கள் தங்கும் விடுதி கட்டும் பணியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி மற்றும் வக்பு வாரிய உறுப்பினர் அ.தமிழ்மகன் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தார்.

இதன் பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு சிறுபான்மையினருக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நாகப்பட்டினம் நகராட்சி நாகூர் பேருந்து நிலையத்தில் பிரதம மந்திரி ஜன் விகாஸ் கார்யாகிராம் 2019-2020 திட்டத்தின் கீழ் ரூ.140 லட்சம் மதிப்பீட்டில் 6000 சதுர அடி பரப்பளவில் நாகூர் தர்காவிற்கு வந்து போகும் யாத்ரீகர்கள் தங்கும் விடுதி கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த விடுதியில் 300 நபர்கள் தங்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா காலங்களில் வருகை தரும் யாத்ரீகர்கள் தங்குவதற்கு ஏற்ப கழிவறைகள், குளியலறைகள், உடை மாற்றும் அறைகள், பொருட்கள் பாதுகாப்பு பெட்டக வசதிகள், சமையலறைகள், உணவருந்தும் இடம் மற்றும் உறங்குவதற்கான படுக்கை வசதிகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

சாதாரண நாட்களில் சிறுபான்மை மக்களின் பிறந்தநாள், திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடத்தும் சமுதாய கூடமாக பயன்படுத்த ஏற்புடைய வகையில் கட்டடம் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க.கதிரவன், திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருஷ்ணன், நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் ஏகராஜ், நகராட்சி பொறியாளர் வசந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.