தற்போதைய செய்திகள்

தாலிக்கு தங்கம் – திருமண நிதியுதவி திட்டத்தால் உயர்கல்வி பெறும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

அமைச்சர் டாக்டா வெ.சரோஜா பெருமிதம்

நாமக்கல்

தாலிக்கு தங்கம் – திருமண நிதியுதவி திட்டத்தால் உயர்கல்வி பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் டாக்டா வெ.சரோஜா பெருமிதத்துடன் கூறினார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட ஆர்.பட்டணம், குச்சிக்காடு பகுதியில் அரசு துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கழக மகளிர் அணி இணைச்செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா கலந்து கொண்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் அமைக்கப்பட்ட ஊட்டச்சத்து கருத்து காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் சத்துணவு மையங்களில் வழங்கப்படும் உணவு பொருட்கள், தானிய வகைகள், பழங்கள், கீரைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு கர்ப்பிணிபெண்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் அப்பகுதியில் அம்மா குறு மருத்துவமனையை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், 10 பெண்களுக்கு அம்மா ஊட்டச்சத்து உணவு பெட்டகம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின்கீழ் நிதி உதவி தொகை, 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1500 மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள்,

10 பெண்களுக்கு உழைக்கும் மகளிருக்கான இருசக்கர வாகனங்கள் மானிய விலையில் பெறுவதற்கான ஆணைகள் ஆகியவற்றையும் அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை அமைச்சர் வெ.சரோஜா பெற்றுக்கொண்டார். கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்த மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேசியதாவது:-

கொரோனா காலத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் 26 லட்சம் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இணை உணவு வழங்கப்பட்டதோடு வீடுகளுக்கு சென்று நேரில் இணை உணவு வழங்கப்பட்டதோடு சத்துணவு மையங்களில் பதிவு பெற்றுள்ள 55 லட்சம் மாணவர்களுக்கு உணவுப்பொருட்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருவதை பிரதமர் பாராட்டியுள்ளார்.

முதலமைச்சர் இதுவரை 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் அமைத்துள்ளார். அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிற்கு முதன்மை முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி விளங்குகிறார் என பிரதமர் பாராட்டியுள்ளார்.

பள்ளிக் கல்வித் துறையில் ரூ.37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதால் உயர்கல்வி பெறுவோரின் சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2011-ம் ஆண்டில் 29 சதவீதமாக இருந்த உயர்கல்வி பெறுவோரின் விகிதம், கடந்த 2011 முதல் 2021-ம் ஆண்டு வரை 20 சதவீதம் அதிகரித்து 49 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தாலிக்கு தங்கம் திருமண நிதியுதவி தொகை வழங்கப்படுவதால் பெண்களின் உயர்கல்வி பெறுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 13 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ப.ஜான்சி, பட்டணம் பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன், ராசிபுரம் வட்டாட்சியர்கள் பாஸ்கரன், திருமுருகன், பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.