தற்போதைய செய்திகள்

பச்சைத் துண்டு போட்டு கொண்டால் ஸ்டாலினால் விவசாயி ஆக முடியாது- அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

விழுப்புரம்,

பச்சைத் துண்டு போட்டுக் கொண்டால் ஸ்டாலினால் விவசாயி ஆக முடியாது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

சமூகநலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த காணை, கோலியனூர், கண்டமங்கலம், விக்கிரவாண்டி, முகையூர், திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளை சேர்ந்த சுமார் 600 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை வழங்கினார்.

இதன் பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பச்சைத் துண்டு போட்டுக் கொண்டால் ஸ்டாலின் விவசாயி ஆகி விட முடியாது. விவசாயத்தை பற்றி தெரிந்தவர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. எவ்வளவு பணிச் சுமை இருந்தாலும் தனது கிராமத்திற்கு இன்றும் சென்று விவசாயத்தை கவனித்து வருகிறார். இதைப் பார்த்தாலே மக்களுக்கு உண்மையான விவசாயி யார் என்று தெரிந்து விடும்.

ஸ்டாலின் அம்பானி வீட்டுப் பிள்ளை. அவருக்கு விவசாயத்தை பற்றி ஒன்றும் தெரியாது. கூவத்தூரில் ஊத்திக்கொடுத்து கூத்தாடி குடியை கெடுத்தவர் தான் டிடிவி தினகரன். அவரிடம் இருந்து சசிகலா தப்பித்து கொள்ள வேண்டும்.

கழகம் ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் மீண்டும் ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்து சிக்கிக் கொள்ள மாட்டோம்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.