தற்போதைய செய்திகள்

மக்களை திசை திருப்ப முயற்சிக்கும் தி.மு.க.வின் சதி வேலை எடுபடாது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசம்

திண்டுக்கல்

மக்களை எதையாவது சொல்லி திசை திருப்புகின்ற திமுகவினரின் சதிவேலை எடுபடாது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி தொப்பம்பட்டி ஒன்றியம் கள்ளிமந்தயம், தொப்பம்பட்டியில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளர்கள் கருப்புசாமி, கிட்டுசாமி தலைமை வகித்தனர். ஒட்டன்சத்திரம் ஒன்றிய கழக செயலாளர்கள் பி.பாலசுப்பிரமணி நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கழக அமைப்பு செயலாளர் வி.மருதராஜ், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம் ஆகியோர் பேசினர்.

இக்கூட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவை போல் முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக ஆட்சி புரிந்து வருகின்றனர். அம்மாவின் வழியில் சிறப்பான எண்ணற்ற திட்டங்களை தமிழக மக்களுக்காக வழங்கி வருகின்றனர். முதல்வரும், துணைமுதல்வரும் நல்ல மனிதர்கள் என்பதால் தமிழகம் முழுவதும் நன்றாக மழை பெய்து விவசாயம் செழித்து வருகிறது.ஆனால் கழக ஆட்சியை வீழ்த்தி விடலாம் என ஸ்டாலின் கனவு காண்கின்றார். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் மக்களை நம்பினார்கள். ஆனால் ஸ்டாலினோ பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோரை நம்பி கட்சியை நடத்தி வருகிறார். அவரது ஆலோசனைப்படி கட்சி செயல்படுகிறது. திமுகவில் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. உதயநிதி கூட்டத்தில் மூத்த கட்சி நிர்வாகிகள் கைகட்டி நிற்கின்றனர்.
ஸ்டாலின் மன்னராகவும், உதயநிதி ஸ்டாலின் இளவரசன் போலவும் செயல்பட்டு வருகின்றனர். திமுகவில் கருணாநிதிக்கு பின் அவரது மகன் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி என தொடர்ந்து வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது.

இதிலும் அவர்கள் குடும்பத்தினருக்குள்ளேயே நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என போட்டி நடந்து வருகிறது. கழகத்தில் இதுபோன்று வாரிசு அரசியல் நடைபெறுகிறதா? கழகத்தின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி தான் என கழக ஒருங்கிணைப்பாளர் அறிவித்து உள்ளார். ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக கட்சியினரை சந்தித்து பேசுகிறார். ஆனால், முதல்வரோ புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேருக்கு நேராக சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார்.

பிரதமர் மோடி விவசாய பெருமக்களுக்காக வேளாண் சட்டத்தை கொண்டு வந்தார். அதில் விவசாயிகளுக்கு நல்ல பலன் உள்ளதால் கழக அரசு ஆதரிக்கிறது. இத்திட்டத்தை எதிர்க்கட்சியினர் எதிர்க்க வேண்டுமானால் நாடாளுமன்றத்திற்கு சென்று குரல் கொடுக்க வேண்டியதுதானே? தமிழ்நாட்டில் ஏன் கருப்புக்கொடி காட்டுகிறார்கள்? கழக ஆட்சிக்கு எதிராக ஏதாவது காரணம் கூறி போராட்டம் நடத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை கெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் செயல்படுகின்றனர். அது நடக்கவே நடக்காது. இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களை எதையாவது சொல்லி திசை திருப்பலாம் என திமுகவினர் நினைக்கின்றனர். இந்த பருப்பு இனி தமிழகத்தில் வேகாது.

அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு மருத்துவ படிப்பில் செய்ததால் 376 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அவர்களுக்கான மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. 376 வருங்கால டாக்டர்களை உருவாக்கிய வீரன் நமது முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் ஒட்டன்சத்திரம் தொகுதியை கழகம் மீட்டெடுக்கும். மீண்டும் ஒட்டன்சத்திரம் கழக கோட்டை என நிரூபிக்கும். இரட்டை இலை மீண்டும் துளிரும். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கழகம் அமோக வெற்றி பெறும். தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ அவரை வெற்றிபெறச் செய்ய கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் அயராது பாடுபடவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சி.எஸ்.ராஜ்மோகன், மாவட்ட பொருளாளர் எஸ்.ஏ.பழனிவேல், ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் உதயம் ராமசாமி, மாவட்ட பேரவை செயலாளர் பாரதி முருகன், இளைஞரணி செயலாளர் வி.டி.ராஜன், வர்த்தக அணி செயலாளர் மீனாட்சி சுந்தரம், ஓட்டுநர் அணி செயலாளர் பிரபு ராம் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தொப்பம்பட்டியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.வை சேர்ந்த இளைஞர்கள் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.