தற்போதைய செய்திகள்

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க, வீடுகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் – மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் வேண்டுகோள்

சென்னை

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க, வீடுகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் சென்னையில் கொரோனா பாதிப்பு 9 சதவீதமாக குறைந்துள்ளது என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறியிருக்கிறார்.

மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தலைமையில் தூய்மை மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை ஆய்வாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அம்மா மாளிகையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பேசினார்.

பின்னர் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவது 9 சதவீதமாக குறைந்துள்ளது. இனிவரும் காலங்களிலும் குறையும் என்று எதிர்பார்க்கிறோம். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளில் குப்பை சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 325 டன்னுக்கு மேல் கழிவுகள் அப்புறப்படுத்தப் பட்டுள்ளன. அதேபோல் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரத்துக்கும் குறையாமல் கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.

தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளது. இதில் டெங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதையடுத்து காலிமனைகளில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு இருக்கிறது. இதை தடுப்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. காலி மனைகளின் உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமான மனைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா காலக்கட்டம் என்பதால் பாதுகாப்பு கருதி மாநகராட்சி ஊழியர்களால் வீட்டுக்குள் சென்று பார்க்க முடியாது. எனவே, அவரவர் வீடுகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மீறும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

டெங்குவுக்கு முதல் உயிரிழப்பாக கடந்த ஜூலை மாதத்தில் ஆலந்தூர் மண்டலத்தில் 3 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. அதன்பிறகு வேறு எங்கும் டெங்கு பாதிப்பு ஏற்படவில்லை.

1 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு சென்னையில் இ பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு ‘இ பாஸ்’ வழங்கும் இணையதளத்தில் திருமணம், இறப்பு, மருத்துவத்துடன் தற்போது கூடுதலாக வேலை நிமித்தமாக செல்வோருக்கும் ‘இ பாஸ்’ வழங்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. ‘இ பாஸ்’ பெறுவதில் பொதுமக்கள் இடைத்தரகர்களை அணுக வேண்டாம். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா மையங்களில் 17 ஆயிரத்து 500 படுக்கைகள் உள்ளன. இந்த நிலையில் அத்திப்பட்டில் உள்ள கொரோனா மையத்தில் இன்னும் 15 நாட்களில் 6 ஆயிரம் படுக்கைகள் தயாராகி விடும். தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு 9 சதவீதமாக உள்ளது.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறினார்.

இந்த கூட்டத்தில் இணை கமிஷனர் மதுசுதன் ரெட்டி, தலைமை என்ஜினீயர் மகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.