மனித- யானை மோதலை தடுக்க அரசு சிறப்பு கவனம் – பேரவையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வலியுறுத்தல்

சென்னை
மனித- யானை மோதலை தடுக்க அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று பேரவையில் பேரவையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வலியுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று வனம், சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் குறித்த மானிய கோரிக்கை விவாதத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
வனங்கள் தான் வாழ்வின் வரங்கள், மரங்கள் தான் காற்றின் கரங்கள். இவை இரண்டும் மனித குல வாழ்வில் இனிமையை இசைக்கும் சுரங்கள் இதனால் தான் தமிழ் அகராதி செடிகளையும் மரங்களையும் தா”வரங்கள்” என குறிப்பிடுகிறது.
எனவே தான் சங்ககாலம், சரித்திரகாலம், தொட்டே அரசுகளின் அரணாய், அடர்ந்த காடுகளும், மலைகளும், வற்றாத ஜீவநதிகளும் அமைந்திருந்ததாக சான்றுகள் நமக்கு பறை சாற்றுகின்றன. எனவே தான் இன்றும் ஒரு நாட்டின் மூன்றில் ஒரு பங்கு வனங்கள் இருக்க வேண்டும் என கொள்கை வகுக்கப்பட்டு அதை அடைவதற்கு எந்த அரசாக இருந்தாலும் முழு முயற்சி எடுத்து வருகிறது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் அறிவார்கள்.
வளத்தின் வழிகாட்டிதான் வனங்கள் என்பதை உணர்ந்து தற்போது தி.மு..க அரசு பதவி ஏற்ற பின் வனப்பரப்பை அதிகரிக்க கிரீன் தமிழ்நாடு மிஷன் என்ற திட்டமானது ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அதாவது நவம்பர் – டிசம்பர் 2021 தான் தொடங்கப்பட்டு மரக்கன்றுகள் வனத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. வழங்கப்படும் மரக்கன்றுகள் செழிப்பானதாக இருந்தால் தான் இறப்பு சதவீதம் குறைவாகவும் உயிர்ப்பு
சதவீதம் கூடுதலாக இருக்கும்.
ஆனால் மரம் வளர்க்க பயன்படும் பாலிதீன் பைகள் 16-க்கு 30 அல்லது 10-க்கு 30 அளவில் இருப்பதால், செடியின் உயரம் பைகளில் 6 அடிக்கு பதிலாக 2 முதல் 3 அடி உயரம் மட்டுமே உள்ளது. இதனால் நாற்றுகளின் உயிர்ப்பு சதவீதம் குறைவாகவே இருந்து வருகிறது. இது போன்ற தொழிற்நுட்பத்தின் அடிப்படையில் ஏற்பட்டுள்ள தவறினை, சரிசெய்து நல்ல பெரிய செழிப்பான மரக்கன்றுகளை
மாநிலம் முழுவதும் வழங்க வேண்டும்.
இதை நான் ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால் 2006-ம் ஆண்டு அம்மா அவர்கள் ஆட்சியை விட்டு சென்றபோது மத்திய அரசின் வன நில அளவை நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி வன பரப்பு மற்றும் மர பரப்பானது 28,665 சதுர கிலோ மீட்டருடன் அதாவது 22.04 சதமாக இருந்தது.
அதே போல் உங்கள் தி.மு.க. அரசு எங்களிடம் 2011-ம் ஆண்டு விட்டு சென்ற போது வன பரப்பு மற்றும் மர பரப்பானது 28-343 சதுர கிலோ மீட்டருடன் 21.79 சதவீதமாக, அதாவது, வனத்தின் பரப்பானது புள்ளி 25 (0.25) சதம் குறைந்துள்ளது.
ஆனால் தற்போது தங்களது 2022 – 2023 கொள்கை விளக்க குறிப்பு புத்தகம் 9-ல் குறிப்பிட்டுள்ள படி 2021-ம் ஆண்டில் வள பரப்பு மற்றும்
மர பரப்பானது 30,843 சதுர கிலோ மீட்டராக அதாவது 23.71 சதவீதமாக, நாங்கள் ஆட்சிப் பொறுப்பை 2011 ம் ஆண்டில், ஏற்றதிலிருந்து 1.92 சதவீத வனப்பரப்பு அதிகரித்த நிலையில், இன்று நீங்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்று இருக்கிறீர்கள்.
இரண்டு அரசுகளுக்கும் ஒரே அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்களது நிர்வாக திறனை நல்ல முறையில் பயன்படுத்தி நடைமுறைபடுத்தப்படும் திட்டங்களிலும், விவசாயிகளை பணியாற்றியதன் விளைவாகத்தான், ஒக்கி, வர்தா, தானே போன்ற பல்வேறு புயல்கள் தாக்கி அழிவை ஏற்படுத்திய போதிலும்,
வன பரப்பு அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்திலும், எடப்பாடியாார் ஆட்சி காலத்திலும் தொடர்ந்து, அதிகரித்து வந்துள்ளது.
ஏன் சென்னை மாநகரில் கூட இயற்கை பேரழிவை எல்லாம் கடந்து கடந்த 10 ஆண்டுகளில் 26 சதம் (18.02 சதுர கிலோ மீட்டரிலிருந்து 22.70 சதுர கிலோ மீட்டர் ஆக) அதிகரித்துள்ளது.என்பதை நான் பெருமையாக இந்த மன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் நான் சார்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ற சில்வர் ஓக் போன்ற மரக்கன்றுகள் வழங்கப் படாமல் கிடைக்கின்ற மரக்கன்றுகளை கொண்டு நடவுசெய்ய அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்பதனை விவசாயிகள் முறையிடுகின்றனர். எனவே இதில் வனத்துறை சிறப்பு கவனம் செலுத்தவேண்டுகிறேன்.
வருமுன்னர் காவா தான் வாழ்க்கை என வள்ளுவர் சொன்னது போல் எதையும் வருவதற்கு முன்னர் பாதுகாக்க வேண்டும். அந்த வகையில் மனித வன உயிரின மோதல்களால் ஏற்படும் இழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நான் சார்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் 4 பேர் யானை தாக்கி உயிர் இழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே பேரவையில் இதே மானியக் கோரிக்கை எண் 54 கொள்கை விளக்கக் குறிப்பில் பக்கம் 66-ல் மனித யானை மோதலை தடுக்க வாழ்விட மேம்பாட்டு பணிகள், யானைபுகா அகழிகள், சூரிய தடுப்புகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் இதே அவையில் எங்கள் திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இது போன்ற யானைகளின் வாழ்விட மேம்பாட்டு பணிகள் மற்றும் தடுப்பு பணிகள் இனிமேல் ஏதாவது மேற்கொள்ளப்படுமா என பணிகள் தொடங்கப் பெறாததை சுட்டிக்காட்டி கேள்வியாக முன் வைத்தார். எனவே இந்த ஆண்டிலாவது இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டுகிறேன்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசினார்.