சிறப்பு செய்திகள்

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மசோதா குறித்து பேரவையில் அம்மா பேசவில்லை

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

சென்னை,

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மசோதா குறித்து முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் பேரவையில் எதுவும் பேசவில்லை என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கழக உறுப்பினரை கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சித்த அமைச்சர் பெரியகருப்பனை கண்டித்து பேரவையிலிருந்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் மீண்டும் சபை நடவடிக்கையில் பங்கு பெற்றனர்.

அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் சட்ட முன்வடிவு குறித்த எங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்றார். இதற்கு பேரவை தலைவர், சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்ட நிலையில் பதிவு செய்வது நியாயமாக இருக்காது.

வேறு சந்தர்ப்பத்தில் பேசி கொள்ளலாம், நடந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து விட்டீர்கள். முன்னாள் முதல்வரும் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்றார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் இந்த சட்டம் குறித்து பேரவையில் பேசவில்லை. அன்றைய சூழலில் அன்றிருந்த ஆளுநர் குறித்து தான் பேசினார்.

நாவலர் முன்மொழிந்த தீர்மானத்தின் அடிப்படையில் பேசினார். இந்த சட்டத்தை முன்மொழிந்தோ, கொண்டு வந்தோ பேசவில்லை. அம்மா ஆதரித்து பேசியதாக கூறினீர்கள். அதற்கு தான் விளக்கம் தெரிவித்தேன் என்று தெரிவித்தார்.